லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இடிந்து விழுந்த கட்டிடம்

 
உலகம்

ஈரான், லெபனான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல் - நிலவரம் என்ன?

2 ஹிஸ்புல்லா தலைவர்கள் உயிரிழப்பு

மோகன் கணபதி

ஈரான் மற்றும் லெபனானின் ராணுவ இலக்குகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை, ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்டு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கின. இதில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். மேலும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் உட்பட 40-க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. மேலும், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது.

இந்நிலையில், ஈரான் மற்றும் லெபனானின் ராணுவ இலக்குகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

          

இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ஈரான் மற்றம் லெபனான் நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து ஒரே நேரத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தெற்கு லெபனானில் ஐடிஎப் (Israel Defense Forces) வீரர்கள் எல்லைப் பகுதிகளுக்கு அருகில் பல இடங்களில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, ஹிஸ்புல்லா (Hezbollah) தீவிரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறோம். ஹிஸ்புல்லாவும், ஈரான் ஆட்சியாளர்களும் இஸ்ரேலை தாக்க முடிவெடுத்தனர். அதற்கான விளைவுகளை அவர்கள் சந்திப்பார்கள்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் தாக்குதல்களை அடுத்து இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டு, உச்சகட்ட எச்சரிக்கை நிலை பின்பற்றப்படுகிறது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள மற்றொரு தகவலில், ‘‘லெபனானில், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் (PIJ) அமைப்பின் தளபதி அபு ஹம்சா ராமி கொல்லப்பட்டார். அவர் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை மற்றும் பொதுமக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தீவிரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டவர்.

சிரியா–லெபனான் எல்லைப் பகுதியில் PIJ உறுப்பினர்களின் நகர்வுகளையும் தெற்கு லெபனானில் ஐடிஎப் படைகளுக்கு எதிரான செயல்பாடுகளையும் அவர் ஒருங்கிணைத்தார். அவரை அகற்றியதன் மூலம், PIJ அமைப்பின் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகள் கணிசமாக பலவீனமாக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேல் நடத்திய மற்றொரு துல்லிய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் புலனாய்வு தலைமையகத் தலைவர் ஹுசைன் மக்லெட் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஹிஸ்புல்லா மற்றும் ஈரானிய ஆட்சியுடன் தொடர்புடைய பல கட்டளை மையங்களும், தைரே நகரில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை சேமித்து வைத்திருந்த இடமும் தாக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

பல முனைத் தாக்குதல்களை எதிர்கொள்ளவும், இஸ்ரேல் மற்றும் அதன் குடிமக்களுக்கு எதிரான எந்த ஒரு அச்சுறுத்தலையும் சமாளிக்கவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT