“இந்தியா மற்றொரு போருக்கு தயாராகிறது... பேச்சுதான் தீர்வு” - பாகிஸ்தான் அதிபர் சர்தாரி

“இந்தியா மற்றொரு போருக்கு தயாராகிறது... பேச்சுதான் தீர்வு” - பாகிஸ்தான் அதிபர் சர்தாரி
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: இந்தியா மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பேச்சுவார்த்தைக்கு முன்வர அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மற்றொரு போருக்குத் தயாராகி வருகிறது. மற்றொரு போருக்குத் தயாராகி வருவதாக அந்நாட்டு தலைவர்கள் கூறுகிறார்கள். வாழ்நாள் முழுவதும் அமைதிக்காகப் பாடுபடும் நான், இதைப் பரிந்துரைக்க மாட்டேன்.

அவர்களுக்கு (இந்தியா) எனது செய்தி என்னவென்றால், போர் உத்திக்கான அறையில் இருந்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மேஜைகளுக்கு வர வேண்டும். அதுதான் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கான ஒரே வழி” என்று தெரிவித்தார்.

ஆசிப் அலி சர்தாரியின் உரைக்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறு என்று அவர்கள் கோஷங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். பெரும் கூச்சலுக்கு மத்தியில் ஆசிப் அலி சர்தாரி தனது உரையை வாசித்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா கடந்த ஆண்டு மே மாதத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடங்கியது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இதன் காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே 4 நாட்களுக்கு போர் நடந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் வேண்டுகோளை ஏற்று இந்தியா சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது.

ஆசிப் அலி சர்தாரி தனது உரையில், ஆப்கனிஸ்தான் உடனான மோதல் குறித்தும் குறிப்பிட்டார். ‘‘இந்தியாவின் பிரதிநிதியாக ஆப்கானிஸ்தான் செயல்படுகிறது. மற்றொரு நாட்டின் விருப்பத்துக்காக ஆப்கனிஸ்தானை போர்க்களமாக பயன்படுத்தப்படுவதை அந்நாடு நிறுத்திக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண ஆப்கனிஸ்தான் முன்வர வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கனிஸ்தான் நடத்தும் தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்தியா பலமுறை தெரிவித்துவிட்டது. கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்தபோது, ரமலான் புனித மாதத்தில் காபூல் மீது பாகிஸ்தான் நடத்திய விமானத் தாக்குதலை இந்தியா கண்டித்தது.

“ரமலான் மாதத்தில் ஆப்கனிஸ்தானின் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் உயிரிழப்புக்கு காரணமான பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. தனது உள்நாட்டு தோல்விகளை மறைப்பதற்கான மற்றுமொரு முயற்சியே இது” என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்தியா மற்றொரு போருக்கு தயாராகிறது... பேச்சுதான் தீர்வு” - பாகிஸ்தான் அதிபர் சர்தாரி
“காமேனி படுகொலையில் மோடி அரசின் மவுனம் நடுநிலையல்ல; பொறுப்பை துறப்பது” - சோனியா காந்தி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in