புரூக்ளின்: ஈரான் முன்னாள் ராணுவ தளபதி சுலைமானி, கடந்த 2020-ம் ஆண்டு இராக் சென்றார். இதையறிந்த அமெரிக்கப் படை அவர் சென்ற கார் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் சுலைமானி இறந்தார். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கூறியது.
இந்நிலையில் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்க வேண்டும் என இராக் இளைஞர் முகமது பாகெர் சாத் தாவூத் அல்-சாதி சபதம் எடுத்தார். தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த தாவூத் அல்-சாதி, சுலைமானியுடன் நெருங்கிய தொடர்பு உடையவர். இவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பைக் கொல்ல சதி திட்டம் தீட்டினார். அவரிடம் இவான்கா ட்ரம்பின் புளோரிடா இல்லம் தொடர்பான வரைபடம் இருந்தது. மேலும், இவான்கா மற்றும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னருக்குச் சொந்தமான வீடு இருக்கும் பகுதியைச் காட்டும் படம் ஒன்றையும் அவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில், “உங்களது அரண்மனைகளோ அல்லது ரகசியப் பாதுகாப்புப் படையோ உங்களைக் காப்பாற்றாது. பழி வாங்குவது காலத்தின் கட்டாயம்” என்று அரபு மொழியில் மிரட்டல் விடுத்திருந்தார்.
இதையடுத்து அவர் கடந்த 15-ம் தேதி அன்று துருக்கியில் கைது செய்யப்பட்டார். பின்னர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் நடத்தப்பட்ட 18 தாக்குதல்கள் மற்றும் தாக்குதல் முயற்சிகள் தொடர்பாக அமெரிக்க நீதித் துறை சார்பில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம்ஸ்டர்டாமில் உள்ள ‘பேங்க் ஆஃப் நியூயார்க் மெலன்' கட்டிடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது, டொரான்டோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தியது உள்ளிட்ட பல சம்பவங்களில் தாவூத்துக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாவூத் தற்போது புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.