டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பழிவாங்குவோம் என்று ஈரான் ராணுவம் சபதம் ஏற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இராக், கத்தார், குவைத், ஜோர்டான், பஹ்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் அமெரிக்காவின் 27 ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று 2-வது நாளாக ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக அரசு வட்டாரங்கள் கூறும்போது, “அபுதாபி, துபாய் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 137 ஏவுகணைகளை வீசியது. 209 ட்ரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு இந்தியர் உட்பட 58 பேர் படுகாயம் அடைந்தனர்’’ என்று தெரிவித்தன.
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை குறிவைத்து 2-வது நாளாக ஈரான் ராணுவம் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அங்குள்ள நட்சத்திர ஓட்டல், குடியிருப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
ஓமன் நாட்டின் டக்ம் துறைமுகத்தின் மீது ஈரான் ட்ரோன்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இதில் சில கட்டிடங்கள் சேதமடைந்தன. ஓமன் கடல் பகுதியில் சென்ற கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் மீது ஈரானின் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. இந்த கப்பலில் 15 இந்தியர்கள், 5 ஈரானியர் இருந்தனர். ஈரான் தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
குவைத்தை குறிவைத்தும் ஈரான் ராணுவம் கடந்த 2 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நேற்று ஈரானிய ஏவுகணைகள் விழுந்தன. கத்தார், ஜோர்டான் நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேலின் பெய்ட் ஷெமேஷ் நகரை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. இதில் சில ஏவுகணைகள் அங்குள்ள குடியிருப்பில் விழுந்தன. இதில் 9 பேர் உயிரிழந்தனர். ஈரான் தாக்குதலால் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், பஹ்ரைன், ஓமனில் பதற்றம் அதிகரித்து வருகிறது.