‘4 முதல் 5 வாரங்களில் போர் முடிந்துவிடும்’ என அமெரிக்க அரசால் கணிக்கப்பட்டு, ஈரான் மீது தொடங்கப்பட்ட போர் 6 மாதங்களைக் கடந்தும் முடியவில்லை. துப்பாக்கிச் சத்தம் ஓயாத மத்திய கிழக்கில், ‘யார் ஜெயித்தார்?’ என்ற கேள்வியை விட ‘யார் எதை இழந்தார்?’ என்ற கேள்விதான் பூதாகரமாக எழுந்துள்ளது.
வான்வழித் தாக்குதல்களும், பொருளாதாரத் தடைகளும் ஒரு தேசத்தைச் சாய்த்துவிடும் என்ற கணிப்பு தவிடுபொடியாகி, உலகப் பொருளாதார நெருக்கடியின் வாசலில் மத்திய கிழக்கு நிற்கிறது.
ஈரானின் ராணுவ உள்கட்டமைப்புகளும் தலைமையும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அதே வேளையில், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்காவும் பல்வேறு ராஜாங்க ரீதியிலான நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. இந்தப் போரின் உண்மையான தாக்கத்தை ராணுவ வெற்றிகளைக் கொண்டு கணக்கிடுவதை விட, உலகப் பொருளாதாரம் மற்றும் பிராந்திய அமைதியில் அது ஏற்படுத்திய மாற்றங்களைக் கொண்டே மதிப்பிட முடிகிறது.
ஈரானிய மக்கள் மற்றும் பொருளாதாரத்தின் மீது விழுந்த பலத்த அடியும், வளைகுடாப் பிராந்தியத்தில் அமெரிக்கா எதிர்கொள்ளும் பாதுகாப்புச் சவால்களும், தீவிர ராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலாகத் தூதரக வழிமுறை ஏன் அவசியம் என்பதை மீண்டும் ஒருமுறை உலகரங்குக்கு வலியுறுத்தியுள்ளன.
அரசியல் விலை கொடுத்த ட்ரம்ப்
ஈரான் மீதான போரை “ஒரு சிறிய உல்லாசப் பயணம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வர்ணித்த நிலை, மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி, அவரது அதிபர் பதவியையே ஆட்டம் காண வைக்கும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
ஈரானுடனான அமெரிக்கப் போருக்கு அமெரிக்க மக்களிடையே ஆரம்பத்திலிருந்தே ஆதரவில்லை. தொடக்கத்தில் 40 சதவீதமாக இருந்த ஆதரவு, பின்னர் 33 சதவீதமாகக் குறைந்தது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைப்பேன் என ட்ரம்ப் அளித்த வாக்குறுதியைப் இந்தப் போர் பலவீனப்படுத்தி, மாறாக விலையை அதிகரிக்கச் செய்தது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை போரைத் தொடங்கிவிட்டது; ஆனால், அதை எப்படி முடிப்பது எனத் தெரியவில்லை. அமெரிக்காவின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஈரான் வலுவான பதில் தாக்குதலை அளித்ததால், அமெரிக்காவால் தாக்குதலின் தீவிரத்தை அதிகப்படுத்த முடிந்ததே தவிர, குறைக்கவோ பின்வாங்கவோ முடியவில்லை.
போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்த அதிபர் ட்ரம்ப், ஈரானின் ஏவுகணைக் குவிப்பு மற்றும் அணுசக்தி செறிவூட்டலுக்கு எதிராக நடக்கும் போர் என்று மக்களிடம் எடுத்துக் கூறினாலும் மக்கள் அதை நம்பவில்லை.
ஈரானைப் பொறுத்தவரை அது சரணடையவில்லை. மாறாக, உலகத்துக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் முக்கிய வழியான ஹார்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து போக்குவரத்தையே முடக்கியது. அதிபர் ட்ரம்ப் சார்ந்திருக்கும் குடியரசுக் கட்சியினரும் எரிபொருள் விலை உயர்வு நவம்பர் இடைத்தேர்தலில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும் என நம்புகிறார்கள்.
உலகப் பொருளாதாரத்தை அசைத்த போர்
ஹார்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஈரானின் தடையால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக உயர்ந்து, உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்த அச்சத்தையும் தூண்டியது. ஆனால், இந்த அச்சம் பொருளாதார வல்லுநர்கள் எண்ணியதை விடக் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியது.
உலக நாடுகள் மாற்று வழியைத் தேடத் தொடங்கியதன் விளைவால் பொருளாதாரம் அசைத்துப் பார்க்கப்பட்டதே தவிர, வேரோடு பிடுங்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை இருமுறை குறைத்தது.
ஈரான் காயம்பட்டது... தோற்கவில்லை!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் நடந்த போரில் ஈரானுக்குப் பலத்த பாதிப்புகள் ஏற்பட்டது உண்மைதான். ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். உள்கட்டமைப்புகள், ராணுவ மையங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நாட்டின் பணவீக்கம் அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவைக் கண்டது. இருப்பினும், இவற்றால் ஈரான் தோற்றுவிட்டது என்று கூற இயலாது.
உலகின் 20% கச்சா எண்ணெய் கடந்து செல்லும் ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை இப்போதுவரை ஈரான் தன்வசம் வைத்திருப்பதே அப்போரில் ஈரான் தோற்கவில்லை என்பதைக் காட்டுகிறது. அமெரிக்காவின் பேட்ரியாட், தாட் ஏவுகணைகளை எதிர்க்க ஈரான் தனது மலிவு விலை ட்ரோன்கள் மூலம் சவால் விடுத்து பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இந்தப் போர் ஈரானுக்குக் காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம்; ஆனால், தோற்கடிக்கவில்லை.
அமெரிக்கா நினைத்தது ஒன்று... நடந்தது வேறு!
மேற்காசியாவில் ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதை அகற்றவே அமெரிக்க - இஸ்ரேல் கூட்டணி போர் தொடுத்தது. ஆனால், ஈரானின் செயல்பாடுகள் அதற்கு மாறாக அமைந்தன. அமெரிக்காவை நேரடியாகத் தாக்காமல், அந்நாட்டுக்கு ஆதரவாக இருந்த நாடுகளைத் துவம்சம் செய்து, பிராந்தியத்தைப் பாதுகாப்பற்றதாக ஈரான் ஆக்கியுள்ளது. சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகள் மீது போர் மறைமுகப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்குத் தோல்வியா?
ஈரானின் போர்த் திட்டத்தைச் சரியாகக் கணிக்காமல் அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியவில்லை. அமெரிக்க ராணுவமும் பல ஆளில்லா விமானங்கள் மற்றும் 42 போர் விமானங்களை இழந்துள்ளது. தனது பேட்ரியாட் ஏவுகணைகளில் 65 சதவீதத்தையும், தாட் ஏவுகணைகளில் 38 சதவீதத்தையும் அமெரிக்கா பயன்படுத்திவிட்டது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முழுமையாக அழிக்கவே அமெரிக்கா போர் தொடுத்தது. ஆனால், அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறவில்லை. மேலும், போரை முடிக்க தேவையான ராஜதந்திர வழி அமெரிக்காவிடம் இல்லை. இதனால் இந்தப் போரை நீண்டகாலப் போராக மாற்றியது.
ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும், துல்லியமான வெற்றியாளரைத் தீர்மானிக்க முடியாமல், இரு தரப்பிற்குமே பெரும் இழப்புகளையும், உலக நாடுகளுக்குப் பொருளாதாரச் சுமையையும் மட்டுமே இந்தப் போர் பரிசாக அளித்துள்ளது.