அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம், பிரின்ஸ் ஜார்ஜ் பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்தில் இருந்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நேற்று சிறப்பு விமானத்தில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டார்.
டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவம் இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இரு தரப்பினரும் பங்கேற்கும் அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் விரைந்துள்ளனர். ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 8-ம் தேதி தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள் பங்கேற்கும் அமைதிப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
இதில் அமெரிக்கா தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகியோரும், ஈரான் தரப்பில் அந்த நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, வெளியுறவு துணை
அமைச்சர் மஜித் தக்த் ரவஞ்சி ஆகியோரும் பங்கேற்கின்றனர். சமரச தூதர்களாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர், வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் ஆகியோர் செயல்பட உள்ளனர்.
ட்ரம்ப் எச்சரிக்கை: ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழுக்கு அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்டியில், “ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை முடிவுகள் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தெரியவரும். எங்களுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யாவிட்டால், ஈரானுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும். எங்களது போர்க் கப்பல்களில் அதிநவீன ஆயுதங்களை ஏற்றி வருகிறோம். ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் அந்த ஆயுதங்களை பயன்படுத்துவோம்’’ என்று தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்க, அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் நேற்று சிறப்பு விமானத்தில் இஸ்லாமாபாத் புறப்பட்டார். ‘‘ஈரானுடன் பேச வேண்டிய விவகாரங்கள் குறித்து அதிபர் ட்ரம்ப் தெளிவான வழிகாட்டுதல் வழங்கியுள்ளார். அதன்படி பேச்சுவார்த்தை நடத்துவேன். எங்களோடு ஈரான் விளையாட முயன்றால் மோசமான விளைவுகள் ஏற்படும்’’ என்று அவர் கூறினார்.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இது போர்நிறுத்த ஒப்பந்த மீறல் ஆகும். தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும். நாங்கள் மீண்டும் துப்பாக்கியைத் தூக்க தயங்க மாட்டோம். எந்த சூழலிலும் லெபனான் மக்களைக் கைவிடமாட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று கூறும்போது, ‘‘தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தப்படி, அனைத்து முனைகளிலும் போரை நிறுத்த அமெரிக்கா, இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால், லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதலை உடனடியாக நிறுத்தாவிட்டால், பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம்’’ என்றார்.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறும்போது, “ஈரானின் நட்பு நாடுகள், அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின் 1, 10-வது பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பகிரங்கமாகவும் அறிவித்தார். ஒப்பந்தத்தை மீறினால் தகுந்த பதிலடி கொடுப்போம்’’ என்றார்.
லெபனான் மீதான தாக்குதல் நிறுத்தம்: இதற்கிடையே, லெபனான் மீதான தாக்குதல்களை குறைத்துக் கொள்ளுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று வான்வழித் தாக்குதல்கள் ஏதும் நடத்தப்படவில்லை என்று கள நிலவரங்கள் கூறுகின்றன. இதற்கிடையே, லெபனானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. லெபனான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதால் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் பிரதிநிதிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.