டெஹ்ரான்: அனுமதி பெறாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாகிஸ்தான் செல்ல முயன்ற கன்டெய்னர் கப்பலை ஈரான் திருப்பி அனுப்பியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் 3 வாரங்களைக் கடந்து நடைபெறுகிறது.
இதனால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்குக் கப்பல் செல்ல ஈரான் தடை விதித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் சில கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியது. இந்நிலையில், அனுமதி பெறாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாகிஸ்தான் செல்ல முயன்ற கன்டெய்னர் கப்பலை ஈரான் திருப்பி அனுப்பியுள்ளது.
இதுகுறித்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (ஐஆர்ஜிசி) கடற்படைத் தளபதி அலிரேசா தாங்சிரி கூறும்போது, "சட்ட நெறிமுறைகளுக்கு இணங்கத் தவறியதாலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதி பெறாததாலும், பாகிஸ்தான் நோக்கி செல்ல முயன்ற செலன் என்ற கன்டெய்னர் கப்பலை கடற்படை வீரர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி உள்ளனர்.
இந்த குறுகிய நீர்வழிப்பாதை வழியாக கப்பல்கள் செல்வதற்கு ஈரானின் கடல்சார் ஆணையத்தின் முழுமையான ஒருங்கிணைப்பு அவசியம். இது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நடவடிக்கை" என்றார். உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் 5-ல் ஒரு பங்கு செல்லும் இந்த முக்கிய பாதையில் ஈரான் தனது கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளது.
"நட்பு நாடுகளின் கப்பல்கள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு செல்லலாம்" என ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்கா இப்பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்பி வரும் வேளையில், பாகிஸ்தான் உள்ளிட்ட இடைத்தரகர்கள் மூலம் 15 அம்ச போர்நிறுத்த திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இருப்பினும், ஈரான் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை நிராகரித்துள்ளது.