அயதுல்லா அலி கமேனி  | கோப்புப்படம்

 
உலகம்

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனி மரணம்!

உறுதி செய்தது ஈரான் அரசு ஊடகம்

வேட்டையன்

டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு ராணுவத் தாக்குதலில் ஈ​ரான் உச்ச தலை​வர் அயத்துல்லா அலி கமேனி மரணம் அடைந்தார். இதை அந்நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது. அவரது மறைவை அடுத்து 7 நாட்கள் பொது விடுமுறையும், 40 நாட்கள் துக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, தாங்கள் நடத்திய தாக்குதலில் கமேனி உயிரிழந்ததாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதை இஸ்ரேலும் கூறியிருந்தது. இந்தச் சூழலில் கமேனி உயிரிழந்ததை ஈரான் அரசின் ஊடக நிறுவனம் உறுதி செய்துள்ளது.

டெஹ்ரானில் சனிக்கிழமை கமேனி தனது அலுவல் பணிகளை வழக்கம் போல கவனித்துள்ளார். அப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பு நடத்திய தாக்குதலில் அந்த கட்டிடம் சேதமடைந்தது. இதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்தன. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் கமேனி மற்றும் அவரது மகள், மருமகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் உயிரிழந்தனர்.

          

40 நாட்கள் துக்கம்: 86 வயதான கமேனி, கடந்த 1989-ம் ஆண்டு முதல் ஈரானில் ஆட்சி பொறுப்பில் இருந்தவர். அதனால் அவரது மறைவை அடுத்து அந்நாட்டில் 7 நாட்கள் பொது விடுமுறை மற்றும் 40 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கமேனியின் உயிர் தியாகத்துடன், அவரது பாதையில் செல்வோம், அவரது பணி மறக்கப்படாது. அவை அதைவிட அதிக வீரியத்துடனும், ஆர்வத்துடனும் தொடரும் என ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

யார் இந்த கமேனி? - கடந்த 1939-ல் ஈரானில் உள்ள மாஸ்ஸாத் நகரில் பிறந்தவர் அயத்துல்லா அலி கமேனி. ஈரானில் 1979-ல் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியை தொடர்ந்து ஐஆர்ஜிசி உடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. அந்த படைப்பிரிவில் பல்வேறு பணிகளை ஒருங்கிணைக்க உதவினார். இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் ஈரானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து 1981 முதல் 1989 வரையில் ஈரானின் அதிபராக பொறுப்பு வகித்தார்.

கடந்த 1989-ல் முன்னாள் ஈ​ரான் உச்ச தலை​வர் ருஹோல்லா கோமேனி மறைவுக்கு பின்னால் அந்த பொறுப்பை கமேனி ஏற்றார். அவரை ஈரானின் வல்லுநர் மன்றம் தேர்வு செய்தது. தற்போது ஈரானின் அடுத்த உச்ச தலை​வரையும் இந்த வல்லுநர் குழுதான் தேர்வு செய்ய உள்ளது.

பழிவாங்க ஐஆர்ஜிசி சபதம்: கமேனி உயிரிழந்ததை அடுத்து ஈரானின் இஸ்​லாமிய புரட்​சிகர காவல் படை (ஐஆர்​ஜிசி), இமாமைக் கொன்றவர்களுக்கு கடுமையான மற்றும் வருந்தத்தக்க தண்டனையை ஈரான் வழங்கும். அவர்களை ஒருபோதும் விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலும் பின்னணியும்:

ஈரானில் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சியில் அணுகுண்டுகள் தயாரிக்க முயற்சி நடப்பதாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த 2025 ஜூன் மாதம் ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் உள்ளிட்ட அணுசக்தி தளங்கள் தரைமட்டமாகின.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கமேனி ஆட்சிக்கு எதிராக ஒரு தரப்பினர் நடத்திய போராட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார். மத்திய கிழக்கில் அமெரிக்க போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் குவிக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, ஈரான் அணு ஆயுத திட்​டத்தை கைவிட மறுப்பதாக கூறி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா இப்போது அந்நாட்டின் மீது தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் இஸ்பகான், லோரஸ்தான், இலாம், கெர்மன்ஷா, குவாம், கராஜ், தப்ரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. தெஹ்ரானில் உள்ள கமேனியின் வீடு, அலுவலகம், ராணுவ அலுவலகம், உளவுத் துறை அலுவலகத்தை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியானதாக தகவல்கள் வெளிவருகின்றன. குறிப்பாக, ஹார்மோஸ்கன் மாகாணம் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளியில் சில குண்டுகள் விழுந்ததில் மாணவிகள் உட்பட 85 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, ஜெருசலேம் நகரங்கள் மற்றும் வடக்கு, மத்திய, தெற்கு பகுதிகளில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியது. ரியாத், தோஹா, அபுதாபி, குவைத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ, விமான, கடற்படைத் தளங்களை குறிவைத்து 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன.

இதனிடையே, “உலகின் தீவிர​வாத மைய​மாக ஈரான் உரு​வெடுத்து உள்​ளது. அண்​மை​யில் ஈரான் அரசுக்கு எதி​ராக போராடிய ஆயிரக்கணக்​கான மக்​களை அந்த நாட்டு ராணுவம் கொன்று குவித்​தது. அணு ஆயுத திட்​டத்தை கைவிட அந்த நாடு மறுக்​கிறது.

அமெரிக்​கா​வின் பாது​காப்​புக்கு ஈரான் மிகப் ​பெரிய அச்​சுறுத்​தலாக நீடிக்​கிறது. இந்த அச்​சுறுத்​தலை முறியடிக்​கவே தற்​போது அந்த நாடு மீது தாக்​குதல் தொடுக்​கப்​பட்டு இருக்​கிறது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்திருந்தார்.

திடீர் தாக்குதல்:

அமெரிக்​கா, ஈரான் இடையே இருதரப்பு அமைதி ஒப்​பந்​தத்தை இறுதி செய்ய ஓமன் வெளி​யுறவு அமைச்​சர் பஃதர் பின் ஹமாத் அல் புசைடி நேரடி​யாக அமெரிக்கா​வுக்கு சென்​றார். மேலும் ஈரான் மீது தாக்​குதல் நடத்​தக்​கூ​டாது என்று பிரிட்​டன், பிரான்​ஸ், ஜெர்​மனி உள்ளிட்ட ஐரோப்​பிய நாடுகளும் அமெரிக்​காவை தொடர்ந்து வலி​யுறுத்தி வந்​தன. இந்தச் சூழலில் யாரும் எதிர்​பா​ராத வகை​யில் அமெரிக்க நேரப்​படி வெள்​ளிக்​கிழமை நள்​ளிர​வில் (ஈரானில் காலை 9.30 மணி) ஈரான் மீது தாக்​குதல் நடத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீரென உத்​தர​விட்​டார். அந்த நேரத்​தில் ஆளும் குடியரசு கட்சி மற்​றும் ஜனநாயக கட்சி தலை​வர்​கள் தூக்​கத்​தில் இருந்​த​தால் யாருக்​கும் தகவல் தெரிய​வில்​லை.

ஈரான் தாக்​குதல் தொடர்​பாக மத்​திய கிழக்​கில் உள்ள நட்பு நாடு​களான சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம், கத்​தார், குவைத் உள்ளிட்ட நாடு​களுக்​கும் அமெரிக்க அரசு முன்​கூட்​டியே தகவல் தெரிவிக்​க​வில்​லை. அமெரிக்க அதிபர் ட்ரம்​பும் இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு​வும் மட்​டும் கலந்​தாலோ​சித்து ஈரான் மீது திடீர் தாக்​குதல் நடத்​தி​யிருப்​ப​தாக அமெரிக்க ஊடகங்​கள் தெரிவித்துள்​ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT