உலகம்

“ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை தாக்குவோம்” - ஈரான் எச்சரிக்கை

டெக்ஸ்டர்

டெஹ்ரான்: ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாக்கப் போவதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு 8 மணி முதல் இந்த நிறுவனங்களின் மீதான தாக்குதல் தொடங்கலாம் என்று ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள், இன்டெல், ஐபிஎம், டெஸ்லா மற்றும் போயிங் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் ஈரானுக்கு எதிரான உளவுப் பணிகள், படுகொலைத் திட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவிற்கு உதவி செய்வதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

          

இது தொடர்பாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானில் நடத்தப்படும் ஒவ்வொரு பயங்கரவாதச் செயலுக்கும் ஈடாக, அந்தந்த நிறுவனங்கள் தங்களின் கிளைகள் அழிக்கப்படுவதை எதிர்பார்க்கலாம். 

ஏப்ரல் 1-ஆம் தேதி புதன்கிழமை, இரவு 8 மணி (இந்திய நேரப்படி இரவு 10 மணி) முதல் இந்தத் தாக்குதல் நடவடிக்கை தொடங்கும். இனிவரும் காலங்களில் இலக்குகளை வடிவமைப்பதிலும், அவற்றைக் கண்காணிப்பதிலும் அமெரிக்கத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்  மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களே முக்கியக் காரணியாக விளங்குவதால், அந்த முதன்மையான நிறுவனங்கள் எங்களின் சட்டபூர்வமான இலக்குகளாக இருக்கும். 

எனவே, இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, உடனடியாகத் தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ய அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையில் இத்தகைய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதை ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்தத் தாக்குதல்கள் தொடங்கலாம் என்பதால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் கிளைகளில் பாதுகாப்பு உச்சக்கட்டமாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT