துபாய்: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அமெரிக்க படைகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் சபாநாயகர் முகமது பகர் காலிபஃப் எச்சரித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதால், அந்நாட்டின் மீது சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதனால் ஈரான் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த மாதம் 28ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். இவர்கள் மீது ஈரான் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 203 பேர் இறந்துள்ளனர். 2,600 பேர் காயம் அடைந்துள்ளனர். போன் இணைப்புகள் மற்றும் இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ”ஈரான் சுதந்திரத்தை எதிர்நோக்கியுள்ளது. அங்கு இதுவரை இல்லாத அளவில் போராட்டம் நடைபெறுகிறது. ஈரான் மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது” என சமூக ஊடகத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். ஆனால் அவர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என அமெரிக்க இதழ்களில் செய்தி வெளியானது. அமெரிக்க அரசு விடுத்திருந்த செய்தியில், ”அதிபர் ட்ரம்ப்புடன் விளையாட வேண்டாம். அவர் சொன்னால், அதை செய்வார்” என எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பகர் காலிபஃப் விடுத்துள்ள எச்சரிக்கையில், ”ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க படைகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம்” என்றார்.
ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி விடுத்துள்ள எச்சரிக்கையில், ”மக்கள் போராட்டம் ஓடுக்கப்படும்” என கூறியுள்ளார். ஈரான் அட்டர்னி ஜெனரல் முகமது ஆசாத் விடுத்துள்ள எச்சரிக்கையில், ”போராட்டத்தில் பங்கெடுப்பவர்கள் கடவுளுக்கு எதிரியாக கருதப்படுபவர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். போராட்டத்துக்கு உதவுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.