ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி
டெஹ்ரான்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என மிரட்டிய அமெரிக்கா, இப்போது வாங்கிக் கொள்ள இந்தியாவிடம் கெஞ்சுகிறது என ஈரான் அமைச்சர் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து முடங்கி எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக மிரட்டி வந்தது.
ஆனால் ஈரானுடன் கடந்த 2 வாரங்களாக போரிட்டு வரும் அமெரிக்கா, இப்போது ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குமாறு உலக நாடுகளை கெஞ்சி வருகிறது’’ என கூறியுள்ளார்.
மேலும், ‘‘ஈரானுக்கு எதிரான சட்டவிரோதப் போரை ஆதரிப்பதன் மூலம் ரஷ்யாவுக்கு எதிரான தங்கள் செயல்பாட்டுக்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெறலாம் என்று ஐரோப்பிய நாடுகள் நினைப்பது பரிதாபத்திற்குரியது’’ என்றும் அராக்சி பதிவிட்டுள்ளார்.
இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெய்யை வாங்குவது தவிர்க்க முடியாதது என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் விவரித்துள்ளார். மேற்கு ஆசிய போரால் ஏற்பட்ட எரிசக்தி தட்டுப்பாடுகளுக்கு மத்தியில், அவசரத் தேவை கருதியே இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு தற்காலிகமாக 30 நாள் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.