எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல்

 
உலகம்

அமெரிக்க புலனாய்வு அமைப்பு தலைவர் காஷ் படேலின் மின்னஞ்சல்களை ஹேக் செய்த ஈரான் ஆதரவு குழு

வெற்றி மயிலோன்

வாஷிங்டன்: அமெரிக்காவின் எஃப்பிஐ (FBI) புலனாய்வு அமைப்பின் இயக்குநர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் புகைப்படங்களை ஈரானுடன் தொடர்புடைய குழு ஹேக் செய்தது. மேலும், அந்தக் குழு காஷ் படேலின் புகைப்படங்களையும், ஆவணங்களையும் இணையத்தில் வெளியிட்டது.

‘Handala Hack Team’ என்ற ஈரான் தொடர்புடைய ஹேக்கர் குழு, காஷ் படேலின் மின்னஞ்சல் கணக்கை ஹேக் செய்ததாக அறிவித்துள்ளது. அந்தக் குழு, “படேலின் பெயர் இனி வெற்றிகரமாக ஹேக் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெறும்” என்று தெரிவித்தது. அமெரிக்காவின் சில பாதுகாப்பு அதிகாரிகள் இச்சம்பவம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்தினர். இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து எஃப்பிஐ மற்றும் அமெரிக்க நீதித்துறை ஆகியவை இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

          

இந்த ஹேக்கிங் மூலம், பத்தாண்டுகளுக்கும் மேலான பழமையான சில ஆவணங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சல்களில், படேலின் பயணங்கள் மற்றும் வணிகம் தொடர்பான கடிதப் பரிமாற்றங்கள் வெளியாகியுள்ளன. ஒரு பழமையான ஸ்போர்ட்ஸ் கார் அருகே நிற்கும் படேல், வாயில் சிகார் வைத்துக்கொண்டு அவர் போஸ் கொடுக்கும் படம் மற்றும் கையில் ரம் பாட்டிலுடன் கண்ணாடி முன் நிற்கும் படம் ஆகியவை வெளியாகியுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் எஃப்பிஐ (FBI) புலனாய்வு அமைப்பின் 9-வது இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல் பதவியேற்றுக் கொண்டார். தங்களை பாலஸ்தீன ஆதரவு ஹேக்கர் குழுவாக சொல்லிக்கொள்ளும் இந்தக் குழு, சமீபத்தில் 'Stryker' என்ற மருத்துவ உபகரண நிறுவனத்தின் கணக்கையும் ஹேக் செய்தது. ஈரானிய இணையப் புலனாய்வுத் துறையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்தக் குழு, தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள குழந்தைகள் பள்ளி மீது அமெரிக்கவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த ஹேக்கிங் நடத்தப்பட்டதாகக் கூறியது.

SCROLL FOR NEXT