டெல் அவிவ்: வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது கடந்த சனிக் கிழமை வான்வழி தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உட்பட உயர்மட்டத் தலைவர்கள் பலர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இஸ்ரேல் மட்டுமல்லாது அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள கத்தார் மற்றும் பஹ்ரைன் தலைநகரங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதை அமெரிக்க வான் தடுப்பு அமைப்புகள் இடைமறித்து தாக்கி அழித்து வருகின்றன. இதனால், துபாய், தோஹா, அபுதாபி மற்றும் மனாமா உள்ளிட்ட நகரங்களில் அவ்வப்போது வெடிச் சத்தங்கள் கேட்டுக் கொண்டு இருக்கின்றன. ஈரானின் தாக்குதல் நேற்று மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலம் பகுதிகளில் பல ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன.
ஈராக்கில், எர்பில் விமான நிலையத்துக்கு அருகே 2 ட்ரோன்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதை நேரில் பார்த்ததாக ஏஎப்பி புகைப்படக் கலைஞர் தெரிவித்துள்ளார். ஈரான் தாக்குதல் காரணமாக, வளைகுடா நாடுகளில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் முதல் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. பஹ்ரைனின் மனாமாவில் உள்ள விமான நிலையத்தில் ட்ரோன்கள் தாக்கியதில் சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டது.
இதுபோல ஐக்கிய அரபு அமீரகத்தில் தாக்குதல் கடுமையாக இருந்தது. துபாயின் குடியிருப்புப் பகுதிகளில் ட்ரோன் பாகங்கள் விழுந்ததில் இருவர் காயமடைந்தனர். சனிக்கிழமையன்று ‘தி பாம்' மற்றும் ‘புர்ஜ் அல் அராப்' ஓட்டல் போன்ற முக்கிய இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. அபுதாபி விமான நிலையம் மீதான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். மற்றொருவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.
துபாயில் விமான சேவை தொடக்கம்: இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு பகுதி அளவிலான விமான சேவை தொடங்கியது. படிப்படியாக விமான சேவை சீராகும் என்று அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரியாத்தில் தாக்குதல்:
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது இரண்டு ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த இந்த தாக்குதலை சவூதி பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வளாகத்துக்குள் கரும்புகை சூழ்ந்ததோடு, கட்டிடத்தின் சில பகுதிகள் தீயில் எரிந்தன. தூதரக வளாகத்தில் பரவிய தீ உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரியாத்தில் உள்ள இந்த அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் பாதுகாப்பு கருதி ஏற்கெனவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் அச்சுறுத்தல் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டு, ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.