டெஹ்ரான்: ஈரானும், அமெரிக்காவும் போர் நிறுத்தத்தை அறிவித்தபின், லெபனான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் 100 ஏவுகணைகளை ஏவி 254 பேரை கொன்றது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளது. இதனால் சண்டை நிறுத்தத்தில் குழப்பமான சூழல் நிலவுகிறது.
போர் காரணமாக மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு திறக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த கெடு கடந்த திங்கள் கிழமை முடிவடைந்தது. ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதலை அமெரிக்கா தொடங்க இருந்த நிலையில் கடைசி நேரத்தில் 2 வார கால சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் ஒப்புக் கொண்டது. இரு நாடுகள் இடையே அமைதி பேச்சுவார்த்தையை ஏற்படுத்தும் நடவடிக்கையில் பாகிஸ்தான் இறங்கியது.
இந்நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதலை லெபனான் நோக்கி திருப்பியது. பெய்ரூட் நகரில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து நேற்று முன்தினம் 100 ஏவுகணைகளை வீசியது. இதில் 254 பேர் உயிரிழந்தனர். 890 பேர் காயம் அடைந்தனர். லெபனான் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டதால், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து ஈரானின் லவன் தீவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியதாக கூறப்படுகிறது. இதனால் சண்டை நிறுத்தம் குறித்து குழப்பமான சூழல் நிலவுகிறது.
ஈரான்- அமெரிக்கா சண்டை நிறுத்தத்துக்கும், லெபனான் மீதான தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை, அது தனிப்பட்ட சண்டை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார். எந்த ஒப்பந்தமாக இருந்தாலும், அதில் லெபனானும் சேர்க்கப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியது. இதனால் போரை தொடர்வதா, அமைதி பேச்சுவார்த்தைக்கு செல்வதா அல்லது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கட்டுப்படுத்துவதா என்ற குழப்பத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளார்.
பாக். சிறப்புக்குழு
ஈரான் போர் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மை கவுன்சில் (என்சிஎம்சி) என்ற சிறப்புக் குழுவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்துள்ளார். இதற்கு பாக். பொருளாதாரத்துறை அமைச்சர் அகத் கான் சீமா, லெப்டினன்ட் ஜெனரல் ஜாபர் இக்பால் ஆகியோர் தலைமை தாங்குவர்.
பாகிஸ்தான் அரசின் அனைத்து துறை பிரதிநிதிகள் இதில் உறுப்பினர்களாக இருப்பர். சண்டை நிறுத்தம் தோல்வியடைந்து மீண்டும் ஈரான் போர் நடைபெற்றால் அதனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படும் பாதிப்புகள், அகதிகள் பிரச்சினை குறித்து இந்த சிறப்பு குழு ஆராயும்.
ஆலோசனை
ஈரான் போரில் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நேட்டோ நாடுகள் உதவாததால், நேட்டோ அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் நேட்டோ தலைமை செயலாளர் மார்க்ரூட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது ஈரான் போர், ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது, நேட்டோ நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் பேசியதாக வெள்ளை மாளிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.
இன்று பேச்சுவார்த்தை
ஈரான் - அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் இன்று அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று ஈரானிலிருந்து 10 பேர் கொண்ட குழு நேற்று பாகிஸ்தான் வந்தது. இதேபோல் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது குழுவினருடன் பாகிஸ்தான் வந்து இன்று பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் நீண்டகால சண்டை நிறுத்தம் மற்றும் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதில் அமெரிக்க படைகளை மேற்கு ஆசியா பகுதிகளில் இருந்து வாபஸ் பெற வேண்டும், தடைகளை நீக்க வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தியில் டோல் வரி வசூலிக்கும் அதிகாரம் தேவை போன்ற கோரிக்கைகளை ஈரான் விடுக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் குழு பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவு என பாகிஸ்தான் கூறியுள்ளது.
தயார் நிலையில் அமெரிக்கப்படை
சண்டை நிறுத்த ஒப்பந்தம் குறித்து ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதாவது: ஈரான் - அமெரிக்கா இடையே முழுமையான ஒப்பந்தம் ஏற்படும் வரை அனைத்து அமெரிக்க போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், ராணுவ வீரர்கள் தயார் நிலையில் ஆயுதங்களுடன் ஈரானை சுற்றி ஓய்வெடுத்துக் கொண்டிருப்பர்.
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது. ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறவில்லை என்றால், ஈரான் மீதான தாக்குதல் யாரும் இதுவரை பார்க்காத வகையில் மிக வலுவானதாக இருக்கும். இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார்.