உலகம்

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை 5 நாட்கள் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவிப்பு

இரு தரப்பும் ஆக்கபூர்வ பேச்சுவார்த்தை மேற்கொள்வதாகவும் தகவல்

மோகன் கணபதி

வாஷிங்டன் டிசி: மத்திய கிழக்கு பகைமையை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா - ஈரான் இடையே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதால் ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கின. இதையடுத்து, ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், அந்த பாதையில் கப்பல் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் கேன்பெரா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் பாதிஹ் பிய்ரோல், ‘‘ஈரான் போர் காரணமாக உலக பொருளாதாரம் மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.

          

இந்த நெருக்கடி இதேபோல் தொடருமானால், எந்த நாடும் இதன் விளைவுகளிலிருந்து விடுபட முடியாது. மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி, 1970-களில் ஏற்பட்ட இரு எண்ணெய் அதிர்ச்சிகளையும், ரஷ்யா –உக்ரைன் போரின் எரிவாயு சந்தை தாக்கத்தையும் விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் விரோதப் போக்குகளுக்கு ஒரு முழுமையான மற்றும் நிரந்தரமான தீர்வு காண்பது குறித்து, கடந்த இரண்டு நாட்களாக மிகச் சிறந்த மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆழமான, விரிவான மற்றும் ஆக்கபூர்வமான இந்த பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் தொடர இருக்கிறது. இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஈரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது மேற்கொள்ள இருந்த அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு போர் துறைக்கு (Department of War) நான் உத்தரவிட்டுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் இன்று (திங்கள்கிழமை) எண்ணெய் விலை 10%-க்கும் மேல் சரிந்துள்ளது. சர்வதேச தரத்திலான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 14%-க்கும் மேல் குறைந்து, ஒரு பேரல் 96 டாலர் என்ற அளவில் விற்பனையானது.

SCROLL FOR NEXT