டெஹ்ரான்: அமெரிக்கா தனது வாக்குறுதியை மீறியதால், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில் இஸ்ரேல் - லெபனான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதால், ஹார் முஸ் ஜலசந்தியை திறப்பதாக ஈரான் அறிவித்தது. இதையடுத்து ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை விலக்கி கொள்ளப்படும் என அமெரிக்கா வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையே இறுதி ஒப்பந்தம் ஏற்படும் வரை ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இது ஒப்பந்த விதிமீறல் என்பதால், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடி கட்டுப்பாடுகள் விதிப்பதாக ஈரான் ராணுவம் அறிவித்தது.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதால், ‘ஜக் ஆர்னவ், சன்மர் ஹெரால்டு’ ஆகிய 2 இந்திய ஆயில் டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்றன. அப்போது ஈரான் ராணுவத்தினர் 2 படகுகளில் வந்து எச்சரிக்கை விடுக்காமல், ‘ஜக் ஆர்னவ்’ கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால் சன்மர் ஹெரால்டு கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை.
இதையடுத்து இந்த 2 கப்பல்களும் ஹார்முஸ் பகுதிக்கு திரும்பி சென்றன. இதில் கப்பலுக்கும் அதில் உள்ள ஊழியர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ‘ஜக் ஆர்னவ்’ என்ற இந்திய கப்பல், ஈராக்கில் இருந்து 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்தது.
இந்தியா அதிருப்தி: ஈரானின் 3 போர்க் கப்பல்களை, அமெரிக்க கடற்படையின் தாக்குதலில் சிக்காமல் வீரர்களுடன் இந்தியா பாதுகாத்து வருகிறது. இந்நிலையில் இந்திய ஆயில் டேங்கர் கப்பல் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய ஆயில் டேங்கர் கப்பல்களுக்கு எந்த தடையும் இல்லை. எனவே, இந்த தாக்குதல் குறித்து இந்திய கடற்படையும் விசாரித்து வருகிறது. ஓமன் வளைகுடா பகுதியில் உள்ள 3 இந்திய போர்க் கப்பல்கள், இந்திய ஆயில் டேங்கர் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.