உலகம்

ஐக்கிய அரபு அமீரக புஜாயிரா துறைமுகத்தின் மீது ஈரான் தாக்குதல்

செய்திப்பிரிவு

அபுதாபி: ஐக்​கிய அரபு அமீரகத்​தி​லுள்ள புஜா​யிரா துறை​முகத்​தின் மீது ட்ரோன்​கள் மூலம் ஈரான் கடும் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. இதனால் அங்கு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்​டிருக்​கிறது.

அணுசக்தி ஒப்​பந்த விவ​காரம் தொடர்​பாக ஈரான் மீது அமெரிக்கா - இஸ்​ரேல் இணைந்து கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்​கிய போர் நேற்று 15-வது நாளாக நீடித்​தது. இப்​போரில் ஈரானின் ராணுவ தளங்​கள், போர்க் கப்​பல்​கள், விமானங்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டன. இதற்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மற்​றும் வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க தளங்​களை ஈரான் தாக்கி வரு​கிறது.

          

இதனிடையே உலகின் கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்​தில் முக்​கிய பாதை​யாக உள்ள ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் முடக்கி உள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய், எரி​வாயு விநி​யோகம் உலகள​வில் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த ஜலசந்தி வழி​யாக கப்​பல் போக்​கு​வரத்தை தடுக்​கக் கூடாது என்று அமெரிக்கா எச்​சரித்​துள்​ளது.

இந்​நிலை​யில் நேற்று ஐக்​கிய அரபு அமீரகத்​தி​லுள்ள புஜா​யிரா துறை​முகத்​தின் மீது ஈரான் படைகள் ட்ரோன்கள் மூலம் கடும் தாக்​குதல் நடத்​தின. துறைமுகம் மீது ட்ரோன்களால் ஈரான் படைகள் தாக்கியபோது அமெரிக்கப் படைகள் அந்த ட்ரோன்களை இடைமறித்துத் தாக்கின. இதன் காரணமாக கீழே விழுந்த ட்ரோன்களின் பாகங்களால் அங்கிருந்த எண்ணெய்க் கிடங்குகள் தீப்பிடித்து எரிந்தன. ஹார்​முஸ் ஜலசந்​திக்கு அருகே இந்த முக்​கிய​மான புஜா​யிரா துறை​முகம் அமைந்​துள்​ளது. இந்த துறை​முகத்​தில் கப்​பல்​களுக்கு எண்​ணெய் வகைகளை ஏற்​றிக் கொண்​டிருந்த போது இந்​தத் தாக்​குதல் நடந்​துள்​ளது என்று அங்​கிருந்து வரும் செய்​தி​கள் தெரிவிக்​கின்​றன.

இந்த புஜா​யிரா துறை​முகத்​தின் வழி​யாகத்​தான் ஹார்​முஸ் ஜலசந்​திக்கு கப்​பல்​கள் சென்று கொண்​டிருக்​கின்றன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ட்ரம்ப் அறி​விப்பு: இதுதொடர்​பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூகவலைதள பக்​கத்​தில் நேற்று கூறிய​தாவது: அமெரிக்க ராணுவம் மத்​திய கிழக்கு வரலாற்​றிலேயே இது​வரை இல்​லாத அளவுக்கு மிக​வும் சக்​தி​வாய்ந்த குண்​டு​வீச்​சுத் தாக்​குதலை நடத்​தி​யுள்​ளது. ஈரானின் மகுட​மாகத் திகழும் கார்க் தீவில் அனைத்து ராணுவ இலக்​கு​களை​யும் அமெரிக்க ராணுவம் முற்​றி​லு​மாக அழித்​துள்​ளது.

மனிதநே​யம் மற்​றும் கண்​ணி​யம் கருதி அந்த தீவில் உள்ள எண்​ணெய் உள்​கட்​டமைப்​பு​களை அழிக்​காமல் விட்​டு​விட நான் முடி​வெடுத்​துள்​ளேன். ஆனால், ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக கப்​பல்​கள் தடை​யின்​றி​யும் பாது​காப்​பாக​வும் செல்​வதற்கு ஈரானோ அல்​லது வேறு எவரேனும் இடையூறு செய்​தால், எனது இந்த முடிவை உடனடி​யாக மறு​பரிசீலனை செய்​வேன். நாங்​கள் தாக்க விரும்​பும் எந்​தவொரு இலக்​கை​யும் தற்​காத்​துக் கொள்​ளும் திறன் ஈரான் நாட்​டிடம் துளி​யும் இல்​லை. ஈரானின் ராணுவ​மும், இந்​தத் தீவிர​வாத ஆட்​சி​யுடன் தொடர்​புடைய மற்ற அனை​வரும் தங்​கள் ஆயுதங்​களைக் கீழே போட்டு விட்​டு, தங்​கள் நாட்​டில் எஞ்சி இருப்​ப​தை​யா​வது காப்​பாற்​றிக் கொள்​வதே புத்​தி​சாலித்​தன​மாகும்.

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக கப்​பல்​களுக்​கான பாது​காப்பை விரை​வில்​ அமெரிக்​க கடற்​படை வழங்​கும்​ இவ்​வாறு அதிபர்​ டொனல்டு ட்​ரம்​ப்​ கூறி உள்​ளார்​.

கார்க் தீவு மீது தாக்குதல்: ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றும் கார்க் தீவு மீது அமெரிக்கா சரமாரியாக குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது. பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவு, ஈரானின் எண்ணெய் முனையமாக செயல்படுகிறது. அங்குதான் பெட்ரோலியப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தை இந்த தீவு கையாளுகிறது.

மேலும் அந்நாட்டின் எரிசக்தித் துறைக்கு ஒரு மிக முக்கிய மையமாகவும் இது திகழ்கிறது. ஈரானுக்கு முக்கியம் வாய்ந்த அந்த தீவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி அங்குள்ள ராணுவ உள் கட்டமைப்புகள், கடற்படை தளம், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை அழித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார்க் தீவு பாரசீக வளைகுடாவின் அனாதை முத்து என்றும் அழைக்கப்படுகிறது.

கண்டனம்: ஈரானின் கார்க் தீவு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்கப் பங்குகளைக் கொண்ட அல்லது அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் செயல்படும் எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி அழிப்போம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

SCROLL FOR NEXT