உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் நூற்றுக்கணக்கில் கண்ணிவெடிகளை வீசியது ஈரான்!

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: ஹார்​முஸ் ஜலசந்தி கடல் பகு​தி​யில் நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை ஈரான் ராணுவம் வீசி உள்ளது.

அரபிக் கடலில் பெர்​சி​யன் வளை​கு​டாவை​யும் ஓமன் வளைகுடாவை​யும் ஹார்​முஸ் ஜலசந்தி இணைக்​கிறது. இது 167 கி.மீ. நீளம், 50 கி.மீ. அகலம் கொண்​ட​தாகும். இந்த ஜலசந்​தி​யின் குறிப்​பிட்ட சில பகு​தி​களில் 33 கி.மீ. அகலம் மட்​டுமே உள்​ளது. அதி​லும் கடல் ஆழமாக உள்ள 3 கி.மீ. அகலம் கொண்ட பகுதி வழியாகவே சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து நடை​பெறுகிறது. இது ஈரான் கடல் எல்​லையை ஒட்டி அமைந்​திருக்​கிறது.

தற்​போது அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவம் இடையி​லான போர் தீவிரமடைந்து வரும் நிலை​யில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்தை ஈரான் ராணுவம் முழு​மை​யாக முடக்கி உள்​ளது. இதன் ​காரண​மாக இந்தியா உட்பட உலகம் முழு​வதும் எல்​பிஜி, சிஎன்​ஜி, கச்சா எண்ணெய்க்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்டு உள்​ளது.

ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சுதந்​திர​மான சரக்கு கப்​பல் போக்​கு​வரத்தை உறுதி செய்ய அமெரிக்கா மற்​றும் பல்​வேறு ஐரோப்​பிய நாடு​கள் தீவிர முயற்​சியை மேற்​கொண்டு வரு​கின்​றன. இதற்​காக அப்​பகு​தி​யில் அமெரிக்க போர்க்​ கப்​பல்​கள் குவிக்​கப்​பட்டு உள்ளன. ஈரான் கடற்​படை​யின் 60 கப்​பல்​கள், ஏராள​மான படகுகளை அமெரிக்க ராணுவம் குண்​டு​களை வீசி அழித்து உள்ளது.

          

இந்த சூழலில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் நூற்​றுக்​கணக்​கான கண்ணிவெடிகளை ஈரான் ராணுவம் வீசி​யிருக்​கிறது. கடலுக்கு அடி​யில் மூழ்​கி​யிருக்​கும் இந்த கண்​ணிவெடிகளை ரிமோட் கண்ட்​ரோல் மூலம் இயக்க முடி​யும். எதிரி​களின் போர்க்​கப்பல்கள், சரக்கு கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் வரும்​போது கண்ணி வெடிகளை வெடிக்​கச் செய்து கப்​பல்​களை தகர்ப்​போம் என்று ஈரான் எச்​சரித்​துள்​ளது.

இது குறித்து சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறிய​தாவது: கடல் கண்ணி வெடிகள் 3 வகைகளாக தயாரிக்​கப் ​படு​கின்​றன. முதல்​வகை கண்​ணிவெடிகள் கடலுக்கு அடி​யில் புதைந்​திருக்​கும். 2வது வகை கண்​ணிவெடிகள் கடலின் சில நூறு அடி ஆழத்​தில் தண்ணீரில் மிதக்​கும். இவற்றை ரிமோட் கண்ட்​ரோல் மூலம் இயக்க முடி​யும். கடலின் மேல் பகு​தி​யில் கப்​பல்​கள் செல்லும் போது இந்த வகை கண்​ணிவெடிகள் மேலெழுந்து வந்து வெடித்துச் சிதறும்.

3-வது வகை கண்​ணிவெடிகள் கடலுக்கு அடி​யில் மிதக்​கும். இவற்றை ரிமோட் கண்ட்​ரோல் மூலம் கடலின் மேற்​பகு​தி்க்கு கொண்டு வந்து குறிப்​பிட்ட இலக்கை நோக்கி நகர்த்தி செல்ல முடி​யும். இதன்​படி எதிரி​களின் கப்​பல்​களை நோக்கி சீறிப் பாயும் கண்​ணிவெடிகள் அவற்​றின் மீது மோதி வெடித்​துச் சிதறும். ஈரான் ராணுவத்​திடம் 3 வகை​யான கண்​ணிவெடிகளும் உள்​ளன. இவ்​வாறு அவர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT