உலகம்

‘ட்ரம்பை புறக்கணிப்பீர்’ - அமெரிக்க வாக்காளர்களுக்கு ஈரான் வேண்டுகோள்

டெக்ஸ்டர்

டெஹ்ரான்: அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளைப் புறக்கணித்து அமைதியான வாழ்வை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க மக்களுக்கு ஈரானின் புரட்சிகரக் காவல் படை கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கப் மக்களுக்கு ஈரான் புரட்சிப் படை எழுதியுள்ள 25 பக்கங்கள் கொண்ட மடலில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவையும், தேவையற்ற வெளிநாட்டுப் போர்களையும் அமெரிக்க வாக்காளர்கள் எதிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொண்டால், இரு நாடுகளும் அமைதியான முறையில் இணைந்து வாழ முடியும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் அமைதியை விரும்பும் தன்மையையும், ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் ஈரானின் திறனையும் அதிபர் ட்ரம்ப் மறைப்பதாக அந்த மடலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் புரட்சிப் படையின் செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹெபி, “அமெரிக்க மக்களின் தேசிய பாதுகாப்பும், அந்நாட்டு ராணுவ வீரர்களின் உயிரும் ஒரு பெரும் பொய்யரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பேராசை கொண்ட ஒருவரால் அமெரிக்கா வழிநடத்தப்படுகிறது" என்று ட்ரம்பைக் கடுமையாக சாடினார்.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக அமெரிக்கா கூறுவதை மறுத்த அவர், இருண்ட நள்ளிரவில் அமெரிக்கா ஓரிரு சிறிய கப்பல்களைப் பாதுகாப்பாகக் கடத்திச் செல்வதால் மட்டுமே ஜலசந்தி திறக்கப்பட்டுவிட்டதாக அர்த்தமாகாது எனத் தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் வேளையில், அமெரிக்க மக்கள் உண்மையை உணர்ந்து சரியான முடிவை எடுப்பார்கள் என ஈரான் நம்புவதாக அவர் கூறினார்.

SCROLL FOR NEXT