‘எனர்ஜி டிரிங்க்’ என்ற லேபிளுக்கு தடையில்லை: ரெட் புல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவு

‘எனர்ஜி டிரிங்க்’ என்ற லேபிளுக்கு தடையில்லை: ரெட் புல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவு
Updated on: 
1 min read

புதுடெல்லி: அதிகளவு காஃபின் கொண்ட பானங்களின் லேபிள்களில் 'எனர்ஜி டிரிங்க்' என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பிறப்பித்த உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

பாட்டில்களில் 'எனர்ஜி டிரிங்க்' எனக் குறிப்பிடுவது நுகர்வோருக்கு உடலுக்கு உடனடி ஆற்றலையோ அல்லது சிறப்புச் சுகாதார நன்மைகளையோ அளிப்பது போன்ற தவறான எண்ணத்தை உருவாக்கும் எனக் கூறி, ரெட் புல், பெப்சிகோ, மான்ஸ்டர் மற்றும் ஹெல் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அந்த சொற்களை மாற்ற 90 நாட்கள் அவகாசம் வழங்கி கடந்த ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பப் பட்டது.

இதனை எதிர்த்து ரெட் புல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், "மனுதாரர் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல், விதிகளுக்கு மாறாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தனது நிலைப்பாட்டை விளக்க நிறுவனத்திற்கு எந்தவொரு வாய்ப்பையும் வழங்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், அந்த தடையை ரத்து செய்தது.

மேலும், ரெட் புல் நிறுவனத்திற்கு உரிய விளக்கம் கோரும் நோட்டீஸ் வழங்கி, அவர்களின் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த பிறகே உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இது தொடர்பாகப் புதிய உத்தரவைப் பிறப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.

ரெட் புல் நிறுவனம் தனது வாதத்தில், இந்தியாவில் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 'எனர்ஜி டிரிங்க்' என்ற சொல்லைப் பயன்படுத்தி வருவதாகவும், கஃபின் கலந்த பானங்களுக்கான பிரிவில் இந்தச் சொல்லைப் பயன்படுத்த முன்னதாகவே அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டியது.

‘எனர்ஜி டிரிங்க்’ என்ற லேபிளுக்கு தடையில்லை: ரெட் புல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட் உத்தரவு
தமிழகம் முழுவதும் 13 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: அஸ்ரா கார்க்குக்கு கூடுதல் பொறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in