உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பயணிக்க இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

எரிவாயு நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு தீவிரம்

செய்திப்பிரிவு

புதுடெல்​லி/டெஹ்​ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதலால் போர்ப் பதற்​றம் உச்ச கட்​டத்தை எட்​டி​யுள்ள நிலை​யில், இந்​தி​ய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்தியாவில் எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது உட்பட பல்வேறு காரணங்களைக் காட்டி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் நேற்று 13-வது நாளை எட்டியது. எனினும், இருதரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்படவில்லை.

          

இதற்கிடையில் ஈரான் கடல் பகுதியை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடப்பதால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. அதன்படி சில கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலும் நடத்தியது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில், மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்.ஜெய்​சங்​கர், ஈரானிய வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அரக்ச்​சி​யுடன் தொலைபேசி வாயி​லாக தீவிர ஆலோ​சனை நடத்தினார். அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அத்தியாவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டார். அத்துடன், இந்​தி​யா​வின் கச்சா எண்​ணெய் மற்​றும் எல்​பிஜி தேவை​யில் 80 சதவீதத்​துக்​கும் மேலாக இறக்​கும​தி​யைச் சார்ந்தே உள்​ளது. இந்த வழித்​தடத்​தில் பாதிப்பு ஏற்​பட்​டால் இந்​தி​யப் பொருளா​தா​ரம் கடுமை​யாகப் பாதிக்​கப்​படும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஈரான் அமைச்சரிடம் 3 முறை ஜெய்சங்கர் பேசியுள்ளார். இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடந்து செல்ல இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் நேற்று அனுமதி வழங்கியது.

ஈரான் மட்​டுமின்​றி, ரஷ்ய வெளி​யுறவு அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ் மற்​றும் பிரான்ஸ் வெளி​யுறவு அமைச்​சர் ஜான்​-நோயல் பரோட் ஆகியோ​ருட​னும் ஜெய்​சங்​கர் ஆலோ​சனை நடத்​தி​னார். அதன் பின்​னணி​யில்​தான், இந்​தி​யக் கப்​பல்​களுக்கு மட்டும் விலக்கு அளிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.

முன்னதாக ஐக்​கிய அரபு அமீரகத்​தில் இருந்து இந்​தி​யா​வுக்கு கச்சா எண்​ணெய் ஏற்றி வந்த தாய்​லாந்து கப்​பல் மீது, ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் மர்ம ஏவு​கணை மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் அந்தக் கப்​பல் தீப்​பற்றி எரிந்​தது. அதில் பயணம் செய்த 20 ஊழியர்​கள் கடலில் குதித்து தப்​பினர்.

வளை​குடா நாடு​களில் கச்சா எண்​ணெய் ஏற்​றிக் கொண்டு ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து செல்​லும் கப்​பல்​கள் மீது ஈரான், ஹவுதி மற்​றும் ஹிஸ்​புல்லா அமைப்​பினர் தாக்​குதல் நடத்தி வரு​கின்​றனர். இதனால் பல எண்ணெய் கப்​பல்​கள் இந்​தியா வரு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது.

அதன்படி, இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளிப்பதற்கு முன்பே, லைபீரியா நாட்டு ஆயில் டேங்​கர் கப்​பல் ‘சென்​லாங் சூயிஸ்​மேக்​ஸ்’ சவுதி அரேபி​யா​வின் ராஸ் டானுரா துறை​முகத்​தில் இருந்து கடந்த 4-ம் தேதி ஒரு லட்​சத்து 35,335 டன் கச்சா எண்​ணெய் நிரப்​பிக் கொண்டு புறப்​பட்​டது. இது கடந்த 8-ம் தேதி ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை வந்​தடைந்​த​தாக கடல்​சார் கண்​காணிப்பு தரவு காட்​டியது. அதன்​பின் அந்த கப்​பல் பற்றி சிக்​னல் கிடைக்​க​வில்​லை.

ஹார்​முஸ் ஜலசந்​திக்​குள் நுழை​யும் கப்​பல்​களின் சிக்​னல்​களை கண்​காணித்து ஏவு​கணை தாக்​குதல் நடப்​படு​வ​தால், சென்​லாங் சூயிஸ்​மேக்ஸ் கப்​பலின் தானி​யங்கி அடை​யாள கரு​வியை, அதன் இந்​திய கேப்​டன் ஆஃப் செய்துள்​ளார்.

இதனால் கப்​பல் எந்த இடத்​தில் வரு​கிறது, எவ்​வளவு வேகத்​தில் சென்று கொண்​டிருக்​கிறது என்​பதை யாரும் அறிய முடி​யாது. இதற்கு கடல்​சார் துறை​யில் ‘டார்க் மோட்’ அல்​லது ‘கோ​யிங் டார்க்’ என பெயர். இதன் மூலம் ஏவு​கணைகளால் கப்​பல் மீது தாக்​குதல் நடத்​தும் வாய்ப்​பு​கள் குறைவு.

இவ்​வாறு சென்​லாங் சூயிஸ்​மேக்ஸ் கப்​பல் ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை கடந்து நேற்று முன்​தினம் மாலை மும்பை ஜவஹர் தீப் துறை​முகம் வந்​தடைந்​தது. ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த பின் மார்ச் 9-ம் தேதி​தான்

இந்த கப்​பலின் தானி​யங்கி அடை​யாள கருவி ஆன் செய்​யப்​பட்​டது. இதனால் ஏவு​கணை தாக்​குதலில்​ இருந்​து இந்த கப்பல் தப்பியது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்துவிட்டதால், இனிமேல் பயமில்லாமல் கச்சா எண்ணெயை கொண்டு வர முடியும். இது மத்திய அரசின் தூதரக வெற்றியாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT