பெங்களூரு: நிலவில் புதிய தளம் அமைக்கும் திட்டத்தில் அமெரிக்காவுடன் இந்தியாவின் இஸ்ரோ இணைய வேண்டும் என்று அந்த நாட்டு தூதர் செர்ஜியோ கோர் அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 3 நாள் விண்வெளி கண்காட்சி நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நாங்கள் மீண்டும் நிலவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளோம். நிலவில் புதிதாக ஓர் தளத்தை அமைக்க திட்டமிட்டு இருக்கிறோம். இந்த திட்டத்தில் இந்தியாவின் இஸ்ரோ அமைப்பும் இணைய வேண்டும் என்று அமெரிக்காவின் நாசா அழைப்பு விடுத்திருக்கிறது.
இதை நினைவுபடுத்தி மீண்டும் நான் அழைப்பு விடுக்கிறேன். நிலவு பயண திட்டத்தில் எங்களோடு இந்தியா இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அமெரிக்காவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவு, செவ்வாய்க் கிரகம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த திட்டத்தில் இந்தியாவும் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கிறது. இதை முழுமனதுடன் வரவேற்கிறேன்.
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா கடந்த ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். அமெரிக்காவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பால் இந்திய வீரர் புதிய சாதனையை படைக்க முடிந்தது. தற்போது இந்திய விண்வெளித் துறையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கால் பதித்துள்ளன. இந்திய நிறுவனங்களுக்காக அமெரிக்க விண்வெளி சந்தையின் கதவுகள் திறந்து இருக்கிறது.
உங்களை ஆவலோடு வரவேற்கிறோம். வாஷிங்டனும் டெல்லியும் இணைந்தால் விண்வெளி துறையில் புதிய உச்சங்களை தொட முடியும். நமக்கு வானம் மட்டுமே எல்லையாக இருக்க முடியும். சர்வதேச விண்வெளி பொருளாதாரத்தை ஊக்குவிக்க இரு நாடுகளும் இணைந்து பணியாற்றலாம். நாம் இணைந்து நிலவுக்கு பயணம் மேற்கொள்ளலாம். இவ்வாறு அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.