வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்த எஸ்ஸார் குழும இணை நிறுவனர் ரவி ரூயா, அவரது மகன் ரேவந்த் ரூயா.
புதுடெல்லி: இந்தியாவின் எஸ்ஸார் குழுமம் அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் மிகப்பெரிய எஃகு ஆலையை அமைக்கிறது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு எஸ்ஸார் குழுமம் செயல்படுகிறது. இரும்பு, கச்சா எண்ணெய், எரிவாயு் என பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறது. பிரிட்டன், சவுதி அரேபியா, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் எஸ்ஸார் குழும கிளைகள் உள்ளன.
இ்க்குழுமத்தின் சார்பில் கடந்த 2007-ம் ஆண்டில் அமெரிக்காவின் நஷ்வாக் நகரில் மெசாபி மெட்டாலிக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. அங்கு சுமார் 16,000 ஏக்கர் பரப்பில் இரும்பு தாது சுரங்கத்தை மெசாபி நிறுவனம் நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து மெசாபி சார்பில் அயோவா மாகாணம், லீ பகுதியில் ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டில் புதிதாக எஃகு ஆலை அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை எஸ்ஸார் குழும இணை நிறுவனர் ரவி ரூயா, அவரது மகன் ரேவந்த் ரூயா நேற்று சந்தித்துப் பேசினர்.
அப்போது அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “கடந்த ஆண்டு எஃகு பொருட்கள் இறக்குமதிக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் நேரடியாக அமெரிக்காவில் ஆலைகளை தொடங்குகின்றன. தற்போது எஸ்ஸார் குழுமம் சார்பில் அமெரிக்காவில் அயோவாவில் மிகப்பெரிய எஃகு ஆலை தொடங்கப்படுகிறது. இதன்மூலம் இந்த துறை உற்பத்தியில் அமெரிக்கா மேலும் வலுவடையும்” என்று தெரிவித்தார்.