லண்டன்: பிரிட்டனில் முதல் முறையாக தனியாக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறை அமைச்சராக இந்தியாவில் பிறந்த கனிஷ்கா நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டனின் புதிய பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிஷ்கா நாராயணை நாட்டின் முதல் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறை அமைச்சராக நியமித்துள்ளார். தனது அமைச்சரவையில் மேற்கொண்டுள்ள பரவலான மாற்றங்களின் ஒரு பகுதியாக, இப்பதவியை அவர் கேபினட் நிலைக்கு உயர்த்தியுள்ளார்.
முன்னதாக, இணையப் பாதுகாப்பு மற்றும் ஏஐ துறை அமைச்சராகப் பணியாற்றிய நாராயண், இனி கேபினட் அலுவலகம் மற்றும் வணிக மற்றும் வர்த்தகத் துறையில் இணைந்து பணியாற்றுவார். மேலும் இனி அவர் கேபினட் கூட்டங்களிலும் கலந்து கொள்வார்.
பிஹார் மாநிலம் முசாபர்பூரில் பிறந்த கனிஷ்கா நாராயண், தனது சிறுவயதை அம்மாநிலத்திலேயே கழித்தார். பின்னர் டெல்லிக்கு இடம்பெயர்ந்து, தனது 12-ம் வயதில் பிரிட்டனின் வேல்ஸ் தலைநகரான கார்டிஃப்புக்கு குடிபெயர்ந்தார். அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்றார். பிறகு, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஐ பட்டம் பெற்றார்.
அரசியலில் நுழைவதற்கு முன்பு நாராயண் தனியார் மற்றும் அரசுத் துறைகளில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். 2024 பொதுத் தேர்தலில், ‘வேல் ஆஃப் கிளமோர்கன்’ தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார்.