வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் நாளை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார்.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா ஆகியவை இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை (ஐஎஸ்எஸ்) அமைத்து உள்ளன. தற்போது அங்கு 7 விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு செய்கின்றனர்.
பொதுவாக 6 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் மாற்றப்படுவது வழக்கம். இதன்படி ரஷ்யாவின் பைக்கானூரில் இருந்து 3 வீரர்கள் ஜூலை 14-ம் தேதி இரவு 7.47 மணிக்கு (இந்திய நேரப்படி ஜூலை 14 இரவு 8.17 மணி) சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்படுகின்றனர்.
இதன்படி அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தை சேர்ந்த அனில் மேனன், ரஷ்ய விண்வெளி வீரர்கள் பியோட்டர் துப்ரோவ், அன்னா கிகினா ஆகியோர் சோயூஸ் எம்எஸ் 29 விண்கலத்தில் 3 மணி நேரம் பயணம் செய்து சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைய உள்ளனர். அவர்கள் 8 மாதங்கள் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.
அனில் மேனன் யார்?
கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்த சேட்டூர் சங்கரன் நாயர், இந்திய சுதந்திர போராட்ட மூத்த தலைவர் ஆவார். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்ற அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். இவருடைய 5 மகள்களில் ஒருவரான மாதவி அம்மாளின் மகன் சங்கரன் நாயர். இவர் உயர் படிப்புக்காக அமெரிக்காவில் குடியேறினார். அவரின் மகன்தான் அனில் மேனன் (49).
மருத்துவம் பயின்ற அவர் முதலில் அமெரிக்க விமானப் படையில் பணியாற்றினார். கடந்த 2014-ம் ஆண்டில் நாசாவில் சேர்ந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த 2021-ல் நாசா விண்வெளி வீரராக தேர்வு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறப்பு பயிற்சி பெற்றார். தற்போது முதல்முறையாக அவர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார்.