வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம், ராலீ நகரில் வில்சன் காலேஜ் ஆப் டெக்ஸ்டைல்ஸ் செயல்படுகிறது. இந்த கல்லூரியில் ஜவுளி தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
கடந்த 8-ம் தேதி வில்சன் காலேஜ் ஆப் டெக்ஸ்டைல்ஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 176 பேர் இளநிலை பட்டங்களையும், 26 பேர் முதுநிலை பட்டங்களையும் பெற்றனர். இந்த விழாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் அனில் கோச்சார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், இளநிலை பட்டம் பெற்ற 176 பேர் மற்றும் முதுநிலை பட்டம் பெற்ற 26 பேர் என மொத்தம் 202 மாணவ, மாணவியரின் கல்விக் கடனை அடைப்பதாக உறுதி அளித்து, அதற்கான தொகையை வழங்கினார்.
ஒட்டுமொத்தமாக மாணவ, மாணவியரின் ரூ.76.18 கோடி கல்விக் கடனை அவர் அடைத்தார். இதுதொடர்பாக பட்டமளிப்பு விழாவில் அனில் கோச்சார் பேசியதாவது: எனது தந்தை பிரகாஷ் கோச்சார், இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து அமெரிக்காவில் குடியேறினார். அவருக்காக வில்சன் காலேஜ் ஆப் டெக்ஸ்டைல்ஸ் கல்லூரியின் கதவுகள் திறந்தன.
கடந்த 1950-களில் எனது தந்தை இந்த கல்லூரியில் பட்டம் பெற்றார். ஜவுளி துறையில் மிகப்பெரிய தொழிலதிபராக உயர்ந்தார். இந்த கல்லூரிக்கு நானும் எனது குடும்பமும் கடன்பட்டிருக்கிறோம். வில்சன் காலேஜ் ஆப் டெக்ஸ்டைல்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர் சுதந்திர பறவைகளாக வாழ வேண்டும்.
இதற்காகவே அவர்களின் கடன் சுமையை எங்களது குடும்பம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனது தந்தை இப்போது உயிரோடு இல்லை. அவரது நினைவாக மாணவ, மாணவியரின் கல்விக் கடன்களை அடைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்திய தொழிலதிபர் அனில் கோச்சாருக்கு அனைத்து மாணவ, மாணவியரும்,கல்லூரி நிர்வாகத்தினரும் மனதார நன்றி தெரிவித்தனர். நியூயார்க் டைம்ஸ் உட்பட அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் அனில் கோச்சாரை பாராட்டி செய்திகளை வெளியிட்டு உள்ளன.