எட்மாண்டன்: கனடாவில் இந்தியர் பிரசாந்த் ஸ்ரீகுமார் (44) பணிபுரிந்து வந்தார். கடந்த 22-ம் தேதி பணியில் இருந்தபோது அவருக்கு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக எட்மாண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்த ஊழியர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் அமர வைத்துள்ளனர். நேரம் செல்லச் செல்ல பிரசாந்தின் ரத்த அழுத்தம் அதிகரித்த நிலையில், அவருக்கு வெறும் ‘டைலனால்’ மாத்திரை மட்டுமே வழங்கி உள்ளனர்.
சுமார் 8 மணி நேரத்துக்குப் பிறகு, அவரை சிகிச்சை அறைக்குள் அழைத்தனர். அங்கு சென்ற 10 வினாடிகளிலேயே, பிரசாந்த் தனது நெஞ்சைப் பிடித்துக்கொண்டு தரையில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
இந்த மரணம் குறித்து தலைமை மருத்துவப் பரிசோதகர் அலுவலகம் விசாரணை நடத்தி வருவதாக, அந்த மருத்துவமனையை நிர்வகிக்கும் ‘கவனன்ட் ஹெல்த்’ அமைப்பு கூறியுள்ளது. எனினும், தனிப்பட்ட நோயாளியின் சிகிச்சை விவரங்களைப் பகிர மறுத்துவிட்டது.
இதுகுறித்து அவருடைய தந்தை குமார் ஸ்ரீகுமார் கூறும்போது, “தகவல் அறிந்து மருத்துவமனைக்கு ஓடினேன். அப்போது, “அப்பா எனக்கு மிகவும் வலிக்கிறது. என்னால் தாங்க முடியவில்லை” என்று அழுதார். அவரை சரியாக பரிசோதிக்காமல் பல மணி நேரம் காத்திருக்க வைத்தனர் ” என்று வேதனையுடன் தெரிவித்தார்.