தனது குடும்பத்தினருடன் ஓட்டுநர் விபீஸ் பள்ளியாளி
ஷார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்குவதை வழக்கமாக கொண்ட இந்திய டிரைவருக்கு ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் பணியாற்றும் இந்திய டிரைவர் விபீஸ் பள்ளியாளி. இவர் மாதந்தோறும் லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கும் இவருக்கு ஒரு முறை கூட பரிசு கிடைத்ததில்லை. இதற்காக மனைவியிடம் திட்டு வாங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த மாதம் கூட 1,000 திர்காமுக்கு லாட்டரி சீட்டு வாங்கினார்.
இந்நிலையில், கூட்டாக சேர்ந்து லாட்டரி சீட்டு வாங்க உறவினரும் அவருடைய இரு நண்பர்களும் விபீஸ்-க்கு அழைப்பு விடுத்தனர். அப்போது அவர்களிடம் நான் ஏற்கெனவே 1,000 திர்காமுக்கு லாட்டரி சீட்டுகள் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். அவர்களின் வற்புறுத்தல் காரணமாக, 15 மில்லியன் திர்காம் பரிசுத் தொகையுள்ள லாட்டரி சீட்டை கூட்டாக வாங்கினார்.
இந்நிலையில், லாட்டரி சீட்டு நிறுவனத்திடம் இருந்து போன் வந்துள்ளது. வழக்கம் போல் லாட்டரி சீட்டு வாங்குவதற்காக அழைப்பார்கள் என விபீஸ் நினைத்தார். ஆனால், அவர் கூட்டாக வாங்கிய லாட்டரிக்கு 25 மில்லியன் திர்காம் பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்தனர். இத்தகவலை முதலில் நம்ப மறுத்த விபீஸ் தனது மனைவியிடம் தகவல் தெரிவித்து ஆன்லைனில் சரிபார்க்கச் சொன்னார். லாட்டரி சீட்டு பரிசு பெற்றவர் பட்டியலில் விபீஸ் பள்ளியாளி பெயர் இருப்பதை அவர் உறுதி செய்தார்.
நான்கு பேர் கூட்டாக சேர்ந்து அந்த லாட்டரியை வாங்கியதால், விபீஸ் பள்ளிக்கு அவரது பங்காக 4 மில்லியன் திர்ஹாம் (ரூ.10 கோடி) கிடைக்கும். இந்த பரிசுத் தொகையுடன் விபீஸ் இந்தியா திரும்பி பெங்களூருவில் படிக்கும் தனது மகள் வந்தனா பெயரில் சொத்துகள் வாங்க முடிவு செய்துள்ளார்.