அதிபர் அனுர குமார திசாநாயக்க உடன் ராஜ்நாத் சிங்

 
உலகம்

“இலங்கைக்கு தோளோடு தோள் நின்று இந்தியா உறுதுணை...” - ராஜ்நாத் சிங்

மோகன் கணபதி

கொழும்பு: கடினமான காலங்களில் இலங்கையுடன் தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு இதயத்துக்கும் ஆன்மாவுக்குமான உறவைப் போன்றது என குறிப்பிட்டுள்ளார்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று தலைநகர் கொழும்பில் அதிபர் அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியாவுக்கு உள்ள ஆர்வத்தை ராஜ்நாத் சிங் வெளிப்படுத்தினார்.

அவர் தனது உரையில், “இலங்கையின் கடினமான காலங்களில் இந்தியா எப்போதும் முதல் நிலையில் நின்று உதவி வருகிறது. இலங்கையில் உள்ள எங்கள் நண்பர்களுடன் நாங்கள் தொடர்ந்து தோளோடு தோள் நின்று செயல்படுவோம். உண்மையான நண்பர்கள் இன்ப துன்ப காலங்களில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக நிற்பார்கள் என்பதில் நாங்கள் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளோம். நமது உறவு இதயங்கள் மற்றும் ஆன்மாக்களின் பிணைப்பைப் போன்றது.

கடந்த ஆண்டு இலங்கை டித்வா புயலால் பாதிக்கப்பட்டபோது, இந்தியா விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இலங்கைக்கு ஆதரவளிக்க ஆபரேஷன் சாகர் பந்து என்ற திட்டத்தை இந்தியா செயல்படுத்தியது.

இந்திய ஆயுதப்படைகள் மற்றும் இலங்கைப் படைகளின கூட்டு முயற்சியால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. போக்குவரத்துத் தொடர்புகளை மீட்டெடுக்கவும், நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கவும் இந்தியா உதவியது.

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை மற்றும் மகாசாகர் என்ற தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றில் இலங்கை மையமாகத் திகழ்கிறது.

அதிபர் பதவியில் நீங்கள் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு வாய்ந்த உறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்ற அவர் விருப்பமாக உள்ளார்.

உங்கள் தலைமையின் கீழ், நமது இருதரப்பு உறவுகள் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளன. இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதில் உங்கள் ஈடுபாடும் தலைமைத்துவமும் பெரும் பங்காற்றியுள்ளன. உங்கள் நட்பையும் ஆதரவையும் நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.

இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும், முதலீட்டாளராகவும் இந்தியா உள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதில் இந்தியா ஆர்வமுடன் உள்ளது.

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க இந்தியா விரும்புகிறது” என தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபருடனான சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கொழும்பில் இன்றைய தினம் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க உடன் மிகவும் ஆக்கபூர்வமான சந்திப்பினை மேற்கொண்டிருந்தேன். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளை அவருடன் பகிர்ந்துகொண்டதுடன், அவரது அரசாங்கம் இரண்டு வருடங்களை நிறைவு செய்தமையையிட்டு அவருக்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.

நாகரிக இரட்டையர்களாகவும், நெருக்கமான அயலவர்களாகவும், கடல்மார்க்கமான பங்காளர்களாகவும் இந்தியாவும் இலங்கையும், நமது நாடுகளின் வளர்ச்சி மற்றும் நமது மக்களின் நலனுக்காக தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்றும், அதேபோல நமது பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் செழுமைக்காக ஒன்றிணைந்து பணியாற்றும் என்றும் நாம் மீள உறுதிபூண்டுள்ளோம்” என தெரிவித்தார்.

தனது இந்த பயணத்தின்போது, இலங்கை நாடாளுமன்ற எதிர்ககட்சித் தலைவர் சரஜித் பிரேமதாசவையும் சந்தித்துப் பேசினார்.

SCROLL FOR NEXT