அமெரிக்க வர்த்த அமைச்சர் ஹோவார்டு லூட்னிக்
நியூயார்க்: அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக அதிபர் ட்ரம்ப்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசாததே ஒப்பந்தம் நிறைவேறாததற்குக் காரணம் என்று அமெரிக்க வர்த்த அமைச்சர் ஹோவார்டு லூட்னிக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய ஹோவார்டு லூட்னிக், ‘‘இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் அந்த நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை நிறைவேற்றினோம். இந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே, அமெரிக்க - இந்திய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நாங்கள் கருதினோம். அதற்காக நான் அதிக முக்கியத்துவம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.
இப்போது பிரச்சினை என்னவென்றால், அந்த ஒப்பந்தம் அதிக வரி விதிப்புகளைக் கொண்டதாக இருந்தது. அதனால், அதை ஒப்புக்கொள்ள இந்தியா தயங்கியது. இது தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடியுடன் நான் பேசினேன். ஒப்பந்தத்தை இறுதி செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் பேசுமாறு கோரினேன்.
அதற்கு அவர், ஒப்பந்தத்தை ஏற்பதை இந்தியாவுக்கு உகந்ததாக உணரவில்லை என கூறினார். இதனால், அவர் ட்ரம்ப்புடனான தொலைபேசி அழைப்பை தவிர்த்தார்.
ஆனால், நாங்கள் ஒப்பந்தத்தை ஏற்க தயாராக இருக்கிறோம் என்று இந்தியா பின்னர் கூறியது. எதற்கு தயாராக இருக்கிறீர்கள் என்று நான் அவர்களிடம் கேட்டேன்’’ என தெரிவித்துள்ளார்.