வாஷிங்டன்: இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் ஈரான் பிரச்சினையைத் தீர்க்க உதவும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபை கூட்டத் தொடர் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதாவது: அண்டை நாடுகளுக்குச் சொந்தமான வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தியது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளின் எரிசக்தி உள்கட்டமைப்பை ஈரான் சோதனைச் சாவடிகளிலிருந்து மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதனால்தான் எங்களது அமெரிக்க நிர்வாகம், இந்தியா - மத்திய கிழக்கு -ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தையும், குழாய் வழியாகவோ அல்லது வேறு வழியாகவோ கச்சா எண்ணெய்யை வெளியே கொண்டு செல்வதற்கான வழிகளையும் வலுவாக ஆதரிக்கிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிராந்தியத்தைப் ஆட்டிப் படைத்து வரும் சவால்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து கடந்து செல்லும் தருவாயில் நாம் இருக்கிறோம். ஈரான் பிரச்சினையைத் தீர்க்க இது ஒன்றுதான் தீர்வாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் என்பது, 2023-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டின்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட ஒரு பன்னாட்டு உள்கட்டமைப்புத் திட்டமாகும். இந்த வழித்தடம், இந்தியாவை வளைகுடா நாடுகளுடன் இணைக்கும் ஒரு கிழக்கு வழித்தடத்தையும், வளைகுடா நாடுகளை ஐரோப்பாவுடன் இணைக்கும் ஒரு வடக்கு வழித்தடத்தையும் உள்ளடக்கியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர் மீது கோபம்
சில செய்தி நிறுவனங்கள் தன்னைப் பற்றியும், அமைச்சரவை சகாக்களைப் பற்றியும் தவறான அல்லது கற்பனையான தகவல்களைப் பரப்பி வருவதாகக் கூறி, பொலிடிகோ, சிஎன்என், எம்எஸ் நவ் ஆகிய செய்தி ஊடகங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் தடை விதித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். இந்நிலையில், சிஎன்என் செய்தியாளரைப் பார்த்ததும் ட்ரம்ப் கோபமடைந்தார். அவர் கூறும்போது, “சிஎன்என் செய்தியாளர் இங்கு வந்து என்னைப் பற்றி செய்தி சேகரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் இங்கே இருக்கக்கூடாது” எனக் கோபமாகக் குறிப்பிட்டார்.