குடியரசு கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம்

 
உலகம்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் விவகாரம்: இந்தியாவுக்கு 500% வரி விதிக்கும் மசோதாவுக்கு ட்ரம்ப் ஒப்புதல்?

மோகன் கணபதி

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான வரியை 500% உயர்த்த வழிவகுக்கும் மசோதாவுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதரவு அளித்திருப்பதாக குடியரசு கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, தான் அதிபரானால் உக்ரைன்-ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என உறுதி அளித்தார் டொனால்டு ட்ரம்ப். ஆனால், இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ட்ரம்ப்பின் முயற்சிகள் முழு அளவில் பலன் தரவில்லை.

இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. குடியரசு கட்சியின் செனட்டரும் ட்ரம்ப்பின் பாதுகாப்பு கொள்கைகளுக்கான ஆதரவாளருமான லிண்ட்சே கிரஹாம், ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்தால் ஆகியோர் இணைந்து இதற்கான மசோதாவை தயாரித்துள்ளனர்.

கிரஹாம்-ப்ளூமென்தால் மசோதா என்று அழைக்கப்படும் இந்த மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப் பச்சைக் கொடி காட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை, லிண்ட்சே கிரஹாம் நேற்று (புதன்கிழமை) சந்தித்ததாகவும், அப்போது பல மாதங்களாக உருவாக்கப்பட்டு வரும் இந்த மசோதாவுக்கு அதிபர் தனது ஆதரவை தெரிவித்ததாகவும் கிரஹாம் கூறியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைன் பல சலுகைகளை வழங்கி வரும் நிலையிலும், ரஷ்ய அதிபர் புதின் தொடர்ந்து அப்பாவி மக்களை கொல்வதால் இது சரியான நேரத்தில் எடுக்கப்ப்டட நடவடிக்கையாக இருக்கும் என்று கிரஹாம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அது சட்டமாக மாறும். அதன்பிறகு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கான ஏற்றுமதிக்கு 500% வரி விதிப்பு உறுதிப்படுத்தப்படும்.

எனவே, இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT