ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஐஐஎம் (பெங்களூரு) வளாகம் அமைக்கப்படும் என்று அந்நாட்டு தலைநகர் ஜகார்த்தாவில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார். அத்துடன், பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), விண்வெளித் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்குப் பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடியை ஜகார்த்தா விமான நிலையத்தில் அதிபர் பிரபோவோ சுபியந்தோ கட்டியணைத்து வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்று முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியந்தோவை தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள மெர்டேகா மாளிகையில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, ‘‘இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய பொற்காலம் இது’’ என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியக் கல்வியை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லும் முக்கிய முயற்சியாக, புகழ்பெற்ற ஐஐஎம் பெங்களூரு கல்வி நிறுவனத்தின் முதல் சர்வதேச வளாகம் இந்தோனேசியாவில் நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது ஆசியான் பிராந்திய மாணவர்களுக்குப் பெரிதும் உதவும்.
பிரம்மோஸ் ஒப்பந்தம்
பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய மைல் கல்லாக, இந்திய - ரஷ்ய கூட்டு தயாரிப்பான ‘பிரம்மோஸ்’ க்ரூஸ் ஏவுகணைகள், இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ‘அஸ்ட்ரா’ வான் வழி ஏவுகணைகளை இந்தோனேசியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸைத் தொடர்ந்து பிரம்மோஸ் ஏவுகணையைப் பெறும் 2-வது ஆசியான் நாடு இந்தோனேசியா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, ‘‘21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பம் சார்ந்தது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தொலைத்தொடர்பு, ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் மற்றும் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை எளிதாக்க, இந்தியாவின் ‘யுபிஐ’ கட்டண முறை, இந்தோனேசியாவின் கட்டண முறையுடன் இணைக்கப்படஉள்ளது. விண்வெளித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பகிர்வும் பலப்படுத்தப்பட உள்ளது.
உருக்கு உற்பத்திக்கு ஆலை
இந்தியாவின் ‘செயில்’ நிறுவனம் மற்றும் இந்தோனேசியாவின் ‘பிடி கிரகடாவ் ஸ்டீல்’ நிறுவனம் இணைந்து உருக்கு உற்பத்திக்கு புதிய ஆலையை இந்தோனேசியாவில் அமைக்கவுள்ளன. தவிர, விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்த முக்கியத்தாதுக்கள் மற்றும் அரியவகை காந்தங்கள் தயாரிப்பிலும் இரு நாடுகளும் கைகோத்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற மதிய உணவுத் திட்டம் மற்றும் பொது விநியோகத் திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட உயர்தர கோதுமை விதைகள் இந்தோனேசியாவுக்கு வழங்கப்படவுள்ளன.
இந்தப் பயணத்தின் மூலம் இந்தியா - இந்தோனேசிய இடையிலான உறவு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
பிரதமருக்கு உயரிய விருது
இந்தோனேசிய பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய ‘பிந்தாங் அதிபூர்ணா’ விருதை அதிபர் பிரபோவோ சுபியந்தோ வழங்கி கவுரவித்தார். இந்த விருது இந்திய மக்களுக்கும், இரு நாடுகளின் நீண்ட கால நட்புறவுக்கும் கிடைத்த அங்கீகாரம் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இந்தோனேசிய குடியரசின் ஒற்றுமை மற்றும் செழுமைக்காக சிறந்த முறையில் சேவையாற்றிய தலைவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படும். இதற்கு முன்னதாக கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.