டெஹ்ரான்: ஈரான் அணு மின் நிலையம் தகர்க்கப்பட்டால், வளைகுடா நாடுகளில் கதிரியக்க பாதிப்பு ஏற்படும் என சர்வதேச அணுசக்தி முகமை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்னர்.
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படை தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் புஷர் அணுமின் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை குண்டு வீசப்பட்டது. இது அணு மின்நிலையத்திலிருந்து 350 மீட்டர் தொலைவில் விழுந்து வெடித்தது. இங்கு நடத்தப்படும் தொடர் தாக்குதலால், ஈரான் தலைநகர் டெஹ்ரான் கதிரியக்க பாதிப்புக்கு ஆளாவதைவிட வளைகுடா நாடுகள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) நிபுணர்கள் மேலும் கூறியதாவது: புஷர் அணு மின் நிலையம் ஈரானின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 1,000 மெகா வாட் திறனுள்ள அணு உலை உள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள அணு உலையில், ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும் 4.5% செறிவூட்டப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. புஷர் அணு மின் நிலையத்தில் 282 டன்கள் கதிரியக்க பொருட்கள் உள்ளன.
இவற்றில் 72 டன்கள் அணு உலையில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் யுரேனியம். ஏற்கெனவே எரியூட்டப்பட்ட யுரேனியம் கழிவுகள் 210 டன் அளவுக்கு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள ஆபத்தான சீசியம்-137 ஐசோடோப், செர்னோபில் அணு உலை விபத்தில் வெளிப்படுத்தியதைவிட 10 மடங்குக்கு மேல் கதிரியக்க பாதிப்பை ஏற்படுத்தும்.
புஷர் அணு மின் நிலையம் தாக்கப்பட்டு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டால், வளைகுடா நாடுகளின் மண் மற்றும் கடல்நீர் கதிரியக்க பாதிப்புக்கு உட்படும். இது பல ஆண்டுகள் நீடிக்கும். ஏராளமான மக்கள் உயிரிழப்பர். புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும்.
இதுதவிர ஈரானில் நடான்ஸ் மற்றும் பர்தோ என்ற 2 யுரேனியம் செறிவூட்டல் மையம் உள்ளது. இஸ்பஹான் பகுதியிலும் யுரேனியம் மையம் உள்ளது. அராக் பகுதியில் அணுசக்தி மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் 40 மெகாவாட் கடின நீர் உலை உள்ளது. இங்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டாலும் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.