வாஷிங்டன்: பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா நூயி, அமெரிக்காவைத் தவிர இந்தியா உள்ளிட்ட வேறு எந்த நாட்டிலும் தம்மால் பெரு நிறுவனத்தின் சிஇஓ ஆகியிருக்க முடியாது என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்திரா நூயி, கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் அமெரிக்காவில் கிடைத்த வாய்ப்புகள் குறித்து பேசினார். ‘‘இந்தியா உட்பட உலகில் வேறு எந்த நாட்டிலும் என்னால் சிஇஓ ஆகியிருக்க முடியாது. ஏனெனில் தகுதிக்கு முக்கியத்துவம் அளிப்பது அமெரிக்க நடைமுறையாக உள்ளது. இங்குள்ள வழிகாட்டிகள் நீங்கள் ஆணா, பெண்ணா, என்ன இனம், என்ன பாலினம் என்று பார்க்க மாட்டார்கள். சிறந்த மூளை உள்ளவர்கள் மட்டுமே உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள்’’ என்று கூறினார்.
மேலும், குடியேறியவர்களுக்கு அமெரிக்கா வழங்கும் வாய்ப்புகள் வேறு எங்கும் கிடைக்காதவை. உலகின் மிகச்சிறந்த நாடு அமெரிக்கா என்றும் அவர் புகழ்ந்துரைத்தார். இந்த கருத்துகள் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன. இந்திரா நூயியின் இந்த கருத்துக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் எதிராக மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.
இந்தியாவின் வளர்ச்சி மற்றும் தகுதி அடிப்படையிலான வாய்ப்புகளை நூயி அநியாயமாக நிராகரித்துவிட்டதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். மறுபுறம், இந்தியாவில் இருக்கும் கட்டமைப்பு ரீதியான தடைகள் குறித்த சங்கடமான உண்மை களையே இவரது கருத்துகள் பிரதிபலிக்கின்றன என்று மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.