லிட்டன் சந்திர கோஸ்
புதுடெல்லி: வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த டிசம்பர் 2ம் தேதி பிரந்தோஷ், உப்தால் சர்க்கார், டிசம்பர் 7ம் தேதி ஜோகேஷ் சந்திர ராய், சுபோர்ணா ராய், டிசம்பர் 12ம் தேதி சாந்தோ சந்திர தாஸ், டிசம்பர் 18ம் தேதி திபு சந்திர தாஸ், டிசம்பர் 24ம் தேதி அம்ரித் மண்டல், டிசம்பர் 29ம் தேதி பஜேந்திர பிஸ்வாஸ், டிசம்பர் 31ம் தேதி கோகன் சந்திர தாஸ், கடந்த 5ம் தேதி ராணா பிரதாப், கடந்த 6ம் தேதி மிதுன் சர்க்கார், சாரத் மணி சக்கரவர்த்தி, கடந்த 10ம் தேதி ஜாய் மகாபோத்ரா, கடந்த 11ம் தேதி சமீர் தாஸ், பிரளாய் சக்கி, கடந்த 16ம் தேதி ரிபன் சாகா ஆகிய இந்துக்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர்.
இந்த சூழலில் வங்கதேசத்தின் காஜிபூரில் இந்து தொழிலதிபர் லிட்டன் சந்திர கோஸ் (55) என்பவர் நடத்தும் ஓட்டலுக்குள் நேற்று முன்தினம் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த லிட்டன் சந்திர கோஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக ஸ்வாபன் மியா, அவரது மனைவி மஜிதா, மகன் மசூம் மியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அளித்த வாக்கு மூலத்தில், லிட்டன் சந்திர கோஸ் ஓட்டலில் பணியாற்றும் அனிதா தாஸ், தங்கள் தோட்டத்தில் வாழைப் பழங்களை திருடி விட்டதாகவும் அதன் காரணமாக ஓட்டல் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்து உள்ளனர்.
வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவி வகிக்கிறார். பாகிஸ்தான், சீனாவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் அவர், இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இந்துக்கள் மீதான தாக்குதல்களை தடுக்க முகமது யூனுஸ் அரசு தவறிவிட்டதாக ஐ.நா. சபை உட்பட சர்வதேச அமைப்புகள் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளன.