லண்டன்: ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் அனல் காற்று வீசி வருகிறது. பல நாடுகளில் 40 டிகிரி செல்சியஸ் கொளுத்துகிறது. அனல் வெயிலால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளான போலந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க் நாடுகளில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. அனல் காற்று வீசுவதால் கடந்த 21-ம் தேதி முதல் தற்போது வரை 1,300 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெயில், அனல் காற்று காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அங்குள்ள மருத்துவமனைகளில் அதிக அளவிலான மக்கள் வெயில், அனல் காற்று பாதிப்பு பிரச்சினைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 18-ம் தேதி முதல் பிரான்ஸில் மட்டும் 74 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தற்போது பிரான்ஸில் வெப்ப அளவு குறைந்துள்ள போதிலும், ஜூலை மாதத்தில் மற்றொரு வெப்ப அலை வீசக்கூடும் என்று அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதேபோல் ஹங்கேரி, ஜெர்மனி, செக் குடியரசு நாடுகளில் 41 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. ஹங்கேரியில் வெயில் அதிகரித்துள்ளதால் அந்நாட்டின் அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு பிரதமர் பீட்டர் மக்யார் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், பொதுச் சேவையில் ஈடுபடுவோர் வெளிப்புறப் பணிகளுக்கான நேரத்தை மாற்றியமைக்குமாறும், உணவகங்கள் அதிக அளவில் குடிநீரை வழங்குமாறும், குளிரூட்டப்பட்ட பொது இடங்களைத் தொடர்ந்து திறந்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.