பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியத்தில் கழிவுநீர்க் குழாய் அமைக்க பள்ளம் வெட்டியபோது ரூ.99 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகருக்கு வடமேற்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்ட் - கில்லிஸ்-டெண்டர்மொன்டே பகுதியில், ஒரு மதுபான உற்பத்தி ஆலை கடந்த 1899 முதல் 1970 வரை செயல்பட்டு வந்தது. தற்போது, அந்தப் பழமையான கட்டிடம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்தக் கட்டிடம் ‘சிஏடபிள்யூ ஊஸ்ட் லான்டரன்’ என்ற சமூக நல அமைப்புக்கு சொந்தமாக உள்ளது. அங்கு புதிய அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், அண்மையில் அங்குள்ள பழைய கழிவுநீர் குழாய்களை மாற்றி புதிய கழிவுநீர் குழாய்களை அமைப்பதற்காக பூமியில் பள்ளம் தோண்டினர். அப்போது, அங்கு தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் செங்கல் சுவருக்கு மத்தியில் இருந்த இதை 18 வயதான கோபெ என்ற பணியாளர் கண்டெடுத்தார்.
அந்தப் புதையலில் சுமார் 50 தங்கக் கட்டிகளும், நூற்றுக்கணக்கான தங்க நாணயங்களும் இருந்தன. இவற்றின் மதிப்பு சுமார் 9 மில்லியன் யூரோக்கள் (சுமார் ரூ.99 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அப்பகுதியில் செல்வந்தராக இருந்த மதுபானத் தயாரிப்பு குடும்பத்தைச் சேர்ந்த தியோபிலஸ் வான் ஆஷே என்பவருக்காக கட்டப்பட்டது தெரியவந்துள்ளது.
தங்கப் புதையல் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரஸ்ஸல்ஸ் நகரிலுள்ள அரசு பாதுகாப்பு மையத்துக்கு தங்கப் புதையல் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தங்கத்துக்கு யார் உரிமை கோரப் போகிறார்கள் என்ற ஆவல் எழுந்துள்ளது. வான் ஆஷே குடும்பத்தின் வாரிசுகள், தாங்கள் இந்தச் செல்வத்துடன் சட்டப்பூர்வமாகத் தொடர்புடையவர்கள் என்பதை நிரூபித்தால், அவர்களுக்கு இந்த தங்கம் கிடைக்கலாம்.
பெல்ஜியம் நாட்டு சட்டத்தின் கீழ், உரிமையாளர்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. வரும் 2031-ம் ஆண்டுக்குள் முறையான உரிமையாளர் யாரும் கண்டறியப்படவில்லை என்றால், இந்த செல்வம் அதைக் கண்டெடுத்தவர்களுக்கும், தற்போதுள்ள அந்தச் சொத்தின் உரிமையாளருக்கும் இடையே பகிர்ந்து அளிக்கப்பட வாய்ப்புள்ளது.