காடி ஐசன்கோட்

 
உலகம்

நெதன்யாகு இல்லாத இஸ்ரேல்: ஐசன்கோட் - அரபு கட்சி கூட்டணி அரசின் வாய்ப்புகளும் சவால்களும்

போத்தி ராஜ்.க

“நெதன்யாகு யுகத்தின் வீழ்ச்சியும், புதிய கூட்டணியின் உதயமும்” - இன்று இஸ்ரேல் அரசியல் களம் சந்தித்துக் கொண்டிருக்கும் மாபெரும் அதிர்வலையை இப்படித்தான் வரையறுக்க முடியும்.

நாட்டின் நீண்டகால பிரதமராக நீடித்து வந்த பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக யூத மக்களிடையே நிலவிய கடும் எதிர்ப்பு உணர்வு, தீவிர வலதுசாரி அணுகுமுறை, தேசியவாதம் மற்றும் அரசியல் ஸ்திரமின்மை ஆகியவை அவரது கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாமல் செய்து, அவரின் 20 ஆண்டுகால பிரதமர் அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

இருந்தாலும், இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத அளவில் பெரும் அரசியல் திருப்புமுனையையும், குழப்பத்தையும் எதிர்கொள்கிறது. தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக முன்னாள் ராணுவத் தலைமை தளபதியும் ‘யாஷர்’ கட்சித் தலைவருமான காடி ஐசன்கோட் உருவெடுத்துள்ளார்.

இஸ்ரேலிய வரலாற்றிலேயே இல்லாத வகையில் அரபு சமூகக் கட்சிகள் மாபெரும் எழுச்சி பெற்று, ஆட்சி அமைப்பதில் கிங் மேக்கராகவும் உருவெடுத்துள்ளனர். ஆட்சி அமைக்க ஐசன்கோட்டுக்கு அதிபர் அழைப்பு விடுத்திருப்பது புதிய அரசியல் விடியலுக்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுவரை இஸ்ரேல் அரசியலில் ஒதுக்கப்பட்டிருந்த அரபு கட்சிகள், இம்முறை நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் முதன்மை சக்தியாக உருவெடுத்துள்ளன. ஐசன்கோட் ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஒருபுறம் நம்பிக்கை அளித்தாலும், அரபு கட்சிகளின் ஆதரவுடன் அமையும் அரசு எந்த அளவுக்கு நிலையானதாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உள்நாட்டில் தொடரும் குழப்பங்களுக்கு இடையே, ஐசன்கோட் அமைக்கும் புதிய அரசு மத்திய கிழக்கின் அமைதிக்கும் உலகளாவிய ராஜதந்திர உறவுகளுக்கும் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது என்பதை உலகம் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேலின் அரசியல் நிலவரம்:

இஸ்ரேலின் 120 உறுப்பினர்களைக் கொண்ட நெசட் (நாடாளுமன்றம்) தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில்  ஆட்சி அமைக்கத் தேவையான 61 இடங்கள் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை.

> முன்னாள் பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான ஆளும் வலதுசாரி கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைத்தன. இதில் தனிப்பெரும் கட்சியாக நெதன்யாகுவின் லிகுட் கட்சி 27 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்கப் பெரும்பான்மைக்கு மேலும் 8 இடங்கள் தேவைப்படுகின்றன.

> பிரதான எதிர்க்கட்சியான காடி ஐசன்கோட்டின் ‘யாஷர்’ கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 48 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சி அமைக்கப் பெரும்பான்மைக்கு 13 இடங்கள் தேவைப்படுகின்றன.

> அரபு கூட்டணிக் கட்சிகள் 19 இடங்களில் வென்றுள்ளனர். இந்த அரபு கட்சிகளான ரா-அம் (Ra'am), ஹடாஷ், தா-அல், பாலத் கட்சிகள் ஐசன்கோட் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ளன. இந்த ஆதரவைச் சேர்த்தால் ஐசன்கோட்டுக்கு மொத்தம் 67 இடங்கள் கிடைக்கும். இது பெரும்பான்மைக்குத் தேவையானதைவிட 6 இடங்கள் கூடுதலாகும்.

அரபு கட்சிகள் காடி ஐசன்கோட் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்ததை அடுத்து, அதிபர் ஐசக் ஹெர்சாக், ‘யாஷர்’ கட்சித் தலைவரான காடி ஐசன்கோட்டுக்கு ஆட்சி அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளார். 28 நாட்களுக்குள் ஐசன்கோட் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தேவைப்பட்டால் 14 நாட்கள் கூடுதலாகவும் பெற்றுக்கொள்ளலாம். இதுதான் இஸ்ரேலின் தற்போதைய அரசியல் நிலையாகும்.

கிங் மேக்கராக அரபு கட்சிகள்:

அரசு கூட்டணியில் ர-ஆம், ஹடாஷ், தா-அல், பாலத் கட்சிகள் உள்ளன. நெதன்யாகு மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஐசன்கோட்டுக்கு இந்தக் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

ஆனால், ஐசன்கோட் கூட்டணியிலே குழப்பம் இருக்கிறது. அவரின் ‘யாஷர்’ கட்சி, நஃப்தாலி பென்னட்டின் மிதவாத - வலதுசாரி ‘டுகெதர்’ கட்சி மற்றும் அவிக்டோர் லிபர்மேனின் வலதுசாரி கட்சி ஆகியவை அரபு கட்சிகளின் ஆதரவோடு அமையும் ஆட்சியை ஏற்கத் தயங்குகின்றன. இருப்பினும், கூட்டணியில் இருக்கும் யாயிர் கோலன் கட்சி, அரபு கட்சிகளை ஆட்சியில் பங்கெடுக்க அனுமதிப்பதற்கு ஆதரவு அளித்துள்ளது.

நெதன்யாகு - ஐசன்கோட் கூட்டணி சாத்தியமாகுமா?

எதிர்க்கட்சித் தலைவரான ஐசன்கோட் ஜெருசேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “லிகுட் கட்சியின் தலைவர் நெதன்யாகு, நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் எங்கள் கூட்டணியில் சேரலாம். கூட்டாக நாட்டின் நலனுக்காக ஆட்சி அமைக்கலாம்” என அழைப்புவிடுத்திருந்தார்.

இரண்டு கட்சிகளுமே எதிர் துருவங்களாக அரசியல் செய்துவிட்டு, ஆட்சிக்காக, ‘இஸ்ரேல் நலன்’ என்ற போர்வையில் கூட்டாக ஆட்சி அமைப்பதை மக்கள் ஏற்கவில்லை. ஐசன்கோட் கூட்டணிக்குள்ளும் குழப்பம் நிலவுகிறது. ஐசன்கோட்டும் அவரது முக்கிய கூட்டாளியான நஃப்தாலி பென்னட்டும் நெதன்யாகுவுடன் இணைந்து ஆட்சி அமைக்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளனர். இதனால் நெதன்யாகு - ஐசன்கோட் கூட்டணி சாத்தியமாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சிக் கூட்டணிக்கு 53 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆட்சி அமைக்க இன்னும் 8 இடங்கள் தேவைப்படுகின்றன. தீவிர வலதுசாரி மற்றும் தீவிர யூதக் கட்சிகள் நெதன்யாகுவையே ஆதரித்தாலும், ராணுவக் கட்டாயச் சேர்க்கை சட்டம் (Haredi Draft Law) காரணமாக யுடிஜே (UTJ) கட்சி உறுப்பினர்கள் அதிபரிடம் நெதன்யாகுவை பரிந்துரை செய்யாமல் நடுநிலை வகித்தது அவருக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.

சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுவது என்னவென்றால், “ஐசன்கோட் புதிய அரசு அமைப்பதைத் தடுக்கவும், நம்பிக்கைத் வாக்கெடுப்பைப் பெறுவதற்கான முயற்சிகளைக் குலைக்கவும் நெதன்யாவுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. ஐசன்கோட்டின் முயற்சி தோல்வியடைந்தால், அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு இயல்பாகவே அடுத்த இடத்தில் இருக்கும் நெதன்யாகுவிடம் வரக்கூடும். அவரும் அதில் தோல்வியுற்றால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும். அந்தச் சூழலிலும் நெதன்யாகு இடைக்காலப் பிரதமராக நீடிக்க முடியும்” என்கின்றனர்.

இஸ்ரேல் அரசிலில் நிலவும் வேறு வாய்ப்புகள்:

யூதக் கட்சிகளின் ஆதரவு:

இஸ்ரேலின் இரண்டு தீவிர பழமைவாத யூதக் கட்சிகளான ஷாஸ் (Shas) மற்றும் யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) ஆகியவற்றை தனது கூட்டணியில் சேர்த்து ஐசன்கோட் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம். இந்தக் கட்சிகள் கைவசம் 13  இடங்கள் உள்ளன. இது பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்களை சரியாக வழங்கும். கட்டாய ராணுவச் சேர்ப்பு என்ற வாக்குறுதி இதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

தேசிய ஐக்கிய அரசு:

ஐசன்கோட்டின் ‘யாஷர்’, பென்னட்டின் ‘டுகெதர்’, லிபர்மேனின் ‘இஸ்ரேல் பிதெனு’ மற்றும் நெதன்யாகுவின் ‘லிகுட்’ ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய ஓர் ஐக்கிய அரசாங்கம் மற்றொரு தேர்வாக இருக்கும். ஆனால், இது நடைமுறைக்கு பொருந்தாத அரசாக இருக்கும்.

ஒருவேளை ஐசன்கோட் அரசாங்கத்தை அமைக்கத் தவறினால், ஆளும் கூட்டணியை அமைக்க நெதன்யாகுவுக்கு அதிபர் ஹெர்சாக் ஒரு வாய்ப்பை வழங்கக்கூடும். இரு தலைவர்களும் தோல்வியுற்றால், நாடாளுமன்றம் மற்றொரு வேட்பாளரை நியமிக்கலாம். 100 நாட்கள் நீடிக்கும் இத்தகைய செயல்முறைக்குப் பிறகும் அரசாங்கம் அமையவில்லை என்றால், இஸ்ரேலியர்கள் மீண்டும் தேர்தலைச் சந்திக்க நேரிடும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT