ஃபுசோ: சக ஊழியரின் புற்று நோய் சிகிச்சைக்காக, தங்களின் ஒரு நாள் வருமானம் முழுவதையும் சீனாவின் ஃபுசோ பகுதியில் உள்ள தெருவோர உணவு வியாபாரிகள் நன்கொடையாக வழங்கினர்.
சீனாவின் ஃபியூஜியான் மாகாணத்தின் ஃபுசோ நகரில் ஃபியூஜியான் பல்கலைக்கழகம் அருகே தெருவோர உணவகங்கள் பல உள்ளன. இங்கு ‘அங்கிள் பிரைட் கேக்’ என்ற பெயரில் உணவகம் நடத்துபவர் ஜாங் ஜியான்வு (50). இவருக்கு சிறுநீரகத்தில் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இவர் கடையை மூடிவிட்டு சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டதால் ஜாங் ஜியான்வு குடும்பத்தினர் ஆன்லைன் மூலம் நிதியுதவி கோரினர். இதைப் பார்த்த ஃபியூஜியான் பல்கலைக்கழக மாணவர்கள் இத்தகவலை பலருக்கு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பினர்.
இதற்கிடையே ஜாங் ஜியான்வுவின் நிலைமையை அறிந்த சக வியாபாரிகள் அவருக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தனர். இவர்களில் பலர் ஜாங் ஜியான்வுக்கு தொழில்முறை போட்டியாளர்கள். ஆனால், அவர்களும் ஜாங் ஜியான்வுக்கு உதவ முடிவு செய்தனர். அனைவரும் கடந்த 10-ம் தேதி தங்கள் கடையின் க்யூ ஆர் கோடை மாற்றி ஜாங் ஜியான்வுவின் க்யூ ஆர் கோடை ஒட்டினர். இதன் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளர் செலுத்தும் பணமும் ஜாங் ஜியான்வுவின் வங்கி கணக்குக்கு நேரடியாக சென்றது.
சில கடைகள் உணவு வகைகளுக்கு 20 சதவீத தள்ளுபடி வழங்கி கூட்டத்தை சேர்த்தனர். உணவகங்களுக்கு வந்த வாடிக்கையாளர்களும் உணவின் விலையைவிட கூடுதலாக செலுத்தினர். அனைத்து உணவகங்களின் ஒரு நாள் வருமானமாக 20,000 யுவான் (ரூ.2,56,000) ஜாங் ஜியான்வுக்கு கிடைத்தது. இந்த ஆதரவு தனது கணவர் மீண்டு வர நம்பிக்கையை அளித்துள்ளதாக கூறிய ஜாங் ஜியான்வுவின் மனைவி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.