உலகம்

தோஷகானா வழக்கு: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை

மோகன் கணபதி

ராவல்பிண்டி (பாகிஸ்தான்): தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்மான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், இருவருக்கும் தலா ரூ.1.64 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அங்கு அளிக்கப்படும் பரிசுகள் விஷயத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை அந்நாட்டு அரசு வகுத்துள்ளது. தோஷகானா கொள்கை என இது அழைக்கப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் அரசுமுறைப் பயணமாக கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் சவூதி அரேபியா சென்றிருந்தார். அப்போது அந்நாட்டின் பட்டத்து இளவரசர், அவருக்கு விலையுயர்ந்த பல்கேரி நகைகளை பரிசாக வழங்கி உள்ளார். அரசு கருவூலத்துக்கு மிகக் குறைந்த தொகையை செலுத்தி, விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை இம்ரான் கான் தனதாக்கிக் கொண்டதாகவும் இது தோஷகானா கொள்கை 2018-க்கு முரணானது என்றும் கூறி அவருக்கும் அவரது மனைவிக்கும் எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு (FIA) கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளதால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷாருக் அர்ஜுமந்த் அங்கேயே தனது தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பில், ‘‘பாகிஸ்தான் தண்டனைச் சட்டம் 34 (பொது நோக்கம்) மற்றும் 409 (குற்றவியல் நம்பிக்கை மீறல்)-ன் கீழ் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 5(2) (அரசு ஊழியர்களின் தவறான நடத்தை)-ன் கீழ் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் என மொத்தம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் இருவருக்கும் தலா ரூ. 1.64 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது.

இம்ரான் கானின் வயது முதிர்வை கருத்தில் கொண்டும் புஷ்ரா பீபி ஒரு பெண் என்பதையும் கருத்தில் கொண்டு இருவருக்கும் மனிதாபிமான அடிப்படையில் குறைந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த அக்டோபரில் இந்த வழக்கில் இருவரும் ஆஜராகினர். அப்போது, தங்கள் மீதான குற்றச்சாட்டை இருவரும் முழுமையாக மறுத்தனர். ‘‘பிரதமர் என்ற போதிலும் நான் ஒரு அரசு ஊழியர் அல்ல. எனது மனைவிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த பரிசு குறித்த விவரங்கள் எனக்குத் தெரியாது. தோஷகானா கொள்கையின் நடைமுறைகளைப் பின்பற்றி நகைகள் மதிப்பிடப்பட்டு, அதற்கு ஈடான தொகை தேசிய கருவூலத்தில் செலுத்தப்பட்டது. அதன்பிறகே அந்த நகைகள் சட்டப்பூர்வமாக சொந்தமாக்கிக் கொள்ளப்பட்டன’’ என இம்ரான் கான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT