கலீதா ஜியா

 
உலகம்

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்: பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்

செய்திப்பிரிவு

டாக்கா: வங்​கதேச முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா (80) நேற்று கால​மா​னார். ஆங்​கிலேயர் ஆட்​சிக் காலத்​தில் மேற்​கு​வங்​கத்​தின் ஜல்​பைகுரி​யில் கடந்த 1945-ம் ஆண்​டில் கலீதா பிறந்​தார்.

கடந்த 1947-ம் ஆண்​டில் இந்​தி​யா, பாகிஸ்​தான் நாடு​கள் உதய​மாகின. அப்​போது கலீ​தா​வின் குடும்​பம் பாகிஸ்​தான் எல்​லைக்கு உட்​பட்ட தினஜ்பூரில் குடியேறியது. கடந்த 1960-ம் ஆண்​டில் பாகிஸ்​தான் ராணுவ கேப்​டன் ஜியா​வூர் ரஹ்​மானை, கலிதா திரு​மணம் செய்​தார். அப்​போது அவருக்கு 15 வயது.

கடந்த 1975 -ம் ஆண்​டில் மூத்த ராணுவ தளபதி ஜியா​வூர் ரஹ்​மான் ஆட்​சி​யைக் கைப்​பற்றி அதிப​ராக பதவி​யேற்​றார். கடந்த 1978-ம் ஆண்​டில் அவர் வங்​கதேச தேசிய கட்​சியை (பிஎன்​பி) தொடங்​கி​னார். கடந்த 1981-ம் ஆண்டு அவர் படு​கொலை செய்யப்பட்டார். இதன்​பிறகு அவரது மனைவி கலீதா ஜியா பிஎன்பி கட்சி தலை​வ​ராக பொறுப்​பேற்​றார்.

கடந்த 1991-ல் நடை​பெற்ற தேர்​தலில் பிஎன்பி அமோக வெற்றி பெற்று கலீதா ஜியா வங்​கதேசத்​தின் முதல் பெண் பிரதம​ராக பதவி​யேற்​றார். கடந்த 2001 பொதுத்​தேர்​தலில் அவர் மீண்​டும் வெற்றி பெற்று பிரதம​ராக பதவி​யேற்​றார்.

கடந்த 2008 முதல் 2024 ஆகஸ்ட் வரை வங்​கதேச பிரதம​ராக ஷேக் ஹசீனா பதவி வகித்​தார். இந்த கால​கட்​டத்​தில் கலீதா ஜியா மற்​றும் அவரது மகன்​கள் தாரிக் ரஹ்​மான், அரபாத் ரஹ்​மான் மீது பல்​வேறு ஊழல் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன. மூத்த மகன் தாரிக் ரஹ்​மான் அரசி​யலை விட்டு விலகி பிரிட்​டிஷ் தலைநகர் லண்​டனில் குடியேறி​னார். இளைய மகன் அராபத் ரஹ்​மான் தாய்​லாந்​தில் குடியேறி​னார். பின்​னர் மலேசி​யா​வுக்கு சென்ற அராபத் கடந்த 2015 ஜனவரி 24-ல் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார்.

இதனிடையே ஊழல் வழக்​கு​கள் காரண​மாக கடந்த 2018-ல் கலீதா ஜியா கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். அப்​போது அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்​பட்​டது. மனி​தாபி​மான அடிப்​படை​யில் கடந்த 2020-ல் அவர் வீட்டு சிறைக்கு மாற்​றப்​பட்​டார். கடந்த 2021 முதல் 2025 வரை அவரது உடல்​நிலை மிக​வும் மோசமடைந்​தது.

கடந்த நவம்​பரில் டாக்​கா​வில் உள்ள எவர்​கேர் மருத்​து​வ​மனை​யில் கலீதா ஜியா அனு​ம​திக்​கப்​பட்​டார். சிறுநீரகம், நுரை​யீரல், கல்​லீரல், இதய நோய் பாதிப்​பு​கள் தொடர்​பாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. டிசம்​பர் மாதத்​தில் உயிர் காக்​கும் கருவி​களின் உதவி​யுடன் அவருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. இந்த சூழலில் லண்​டனில் வசித்து வந்த கலீதா ஜியா​வின் மகன் தாரிக் ரஹ்​மான் கடந்த 25-ம் தேதி டாக்கா திரும்பி தாயை கவனித்து வந்​தார். நேற்று காலை 6 மணி அளவில் கலீதா ஜியா மருத்​து​வ​மனை​யில் உயி​ரிழந்​தார்.

இதுதொடர்​பாக வங்​கதேச இடைக்​கால அரசின் தலை​வர் முகமது யூனுஸ் கூறும்​போது, “கலீதா ஜியா மறைவுக்​காக அரசு சார்​பில் 3 நாட்​கள் துக்​கம் அனுசரிக்​கப்​படும். அவரது இறு​திச் சடங்கு புதன்​கிழமை நடை​பெறும்” என்று தெரி​வித்​தார்.

பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: வங்​கதேச முன்​னாள் பிரதமரும், வங்​கதேச தேசிய கட்​சி​யின் தலை​வரு​மான கலிதா ஜியா மறைவு செய்தி கவலையளிக்​கிறது. அவருடைய குடும்​பத்தினருக்கும், வங்​கதேச மக்​களுக்​கும் ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்து கொள்​கிறேன். இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

இந்​தி​யா​வில் தஞ்​சமடைந்​துள்ள வங்​கதேச முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட தலை​வர்​கள்​ பலர்​, கலீ​தா மறைவுக்​கு இரங்​கல்​ தெரிவித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT