சிங்கப்பூர்: சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 3 சரக்கு கப்பல்கள் மற்றும் அவற்றில் உள்ள 44 மாலுமிகளை விடுவிப்பது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
சோமாலிய கடல் பகுதி மற்றும் ஏடன் வளைகுடா வழியாக கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சென்ற ஹானர் 25, யுரேகா என்ற எண்ணெய்க் கப்பல்களும், ஸ்வார்ட் என்ற சரக்கு கப்பலும் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டன.
கடற்கொள்ளையர்களை தடுப்பதற்காக சரக்கு கப்பலில் உள்ள பாதுகாப்பு ஊழியர்கள் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர். ஆனால், அதையும், மீறி கடற்கொள்ளையர்கள் கப்பலில் ஏறி கடத்தி விடுகின்றனர். ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியதில் இருந்து, மேற்கு இந்தியப் பெருங்கடலில் சரக்கு கப்பல்கள் மீதான கடற்கொள்ளையர்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது.
கடத்தப்பட்ட 3 கப்பல்கள் மற்றும் 44 மாலுமிகளை மீட்பதற்கான பேச்சுவார்தையில் கப்பல்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நாடுகள், கப்பல் உரிமையாளர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கப்பல் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, ஐ.நா சபை, அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றால் பராமரிக்கப்படும் தடைப் பட்டியல்களுடன் பிணைத் தொகையைப் பெறுபவரின் அடையாளம் சரிபார்க்கப்படுகிறது.
பிணைத்தொகை மனிதாபிமான அடிப்படையில் செலுத்தப்பட்டாலும், தடைகள் குறித்த சர்வதேச சட்டங்கள் மீறப்படாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கடத்தப்பட்ட 3 கப்பல்களும், 44 மாலுமிகளும் விரைவில் மீட்கப்படுவர் எனத் தெரிகிறது. இந்தாண்டில் கடந்த ஜுன் வரை ஆசிய கடற்பகுதியில் 35 கடற்கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக சிங்கப்பூரில் செயல்படும் ரீகேப் தகவல் பகிர்வு மையம் தெரிவித்துள்ளது.