

புதுடெல்லி: நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான ரயில் இன்ஜினை தயாரிக்க கடந்த 2021-ம் ஆண்டுமுயற்சிகள் தொடங்கின. ரூ.136 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டல ரயில்வே இத்திட்டத்தை 2022 ஏப்ரலில் தொடங்கியது.
இத்திட்டத்துக்கான டெண்டர் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேதா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம்தான் எரிபொருட்களை சப்ளை செய்கிறது. ஹைட்ரஜன் ரயிலை வடிவமைக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டிதொழிற்சாலையில் (ஐசிஎஃப்) நடைபெற்றன. பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடைபெற்றன.
இதையடுத்து, ரயிலை அறிமுகப்படுத்த கடந்த மே 22-ம் தேதி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயிலைபிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ஜெர்மனியில் முதன்முதலாக உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் 2018-ம் ஆண்டில் இயக்கப்பட்டது. பின்னர் ஜப்பான், சீனா, அமெரிக்கா தங்கள் நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயிலை இயக்கின என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) முழுமையாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்ச கட்டணம் ரூ.25: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த ஹைட்ரஜன் ரயில், ஹரியானா மாநிலத்தின் மின்மயமாக்கப்படாத 89 கி.மீ. நீளமுள்ள ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் உள்ள 12 ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தினமும் 2 முறை இருமார்க்கங்களிலும் இயக்கப்படும். ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் இதன் பயணக் கட்டணம் மிகக் குறைவாக ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.25 வரை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் பாரம்பரிய டீசல் அல்லது மின்சார வயர்களுக்கு பதிலாக, அதிநவீன 1200 கிலோவாட் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. ரயில் வேகம் எடுக்கும்போது உந்துதலை தர லித்தியம் பெரோ பாஸ்பேட் பேட்டரிகளும், ரயில் வேகம் குறையும் போது பேட்டரியை தானாகவே ரீசார்ஜ் செய்யும் மறுஉருவாக்க தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளன.
ஹரியானாவின் ஜிந்த் ரயில் நிலையத்தில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.இந்த ரயில் அறிமுக நிகழ்ச்சியுடன் ரூ.14,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.பின்னர், ஹரியானாவில் ரூ.12,470 கோடி, சண்டிகரில் ரூ.4,700 கோடி, பஞ்சாபில் ரூ.5,470 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் இன்று தொடங்கி வைக்க உள்ள ஹைட்ரஜன் ரயில் 2 ஓட்டுநர் பெட்டிகள், 8 பயணியர் பெட்டிகள் என 10 பெட்டிகளைக் கொண்டது. ஒரே நேரத்தில் 2,600-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. சோதனையின்போது இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தை தொட்டது. ஆனாலும், பாதுகாப்பான, வழக்கமான இயக்கத்துக்காக மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கப்பட உள்ளது.
9 ரயில் நிலையங்கள் திறப்பு: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ்,தெற்கு ரயில்வேயில் ரூ.14.79 கோடியில் சென்னை பூங்கா, ரூ.15.14 கோடியில் சின்னசேலம், ரூ.12.18 கோடியில் குன்னூர் மற்றும் கேரளாவில் தலசேரி, திரூர், பரப்பனங்காடி, காலடி ரயில் நிலையத்துக்காக அங்கமாலி, சாலக்குடி, நிலம்பூர் என 9 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல, அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
முதியவர்கள், நோயாளிகளின் நலன் கருதி இந்த நிலையங்களில் புதிய எஸ்கலேட்டர்கள், லிப்ட்வசதிகள் நிறுவப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் எளிதாகப் பயணிக்கும் வகையில் பிரத்யேக சாய்தளப் பாதைகள், பிரெய்லி வழித்தடங்கள், சிறப்பு கழிவறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்பு 4.5 மீட்டராக இருந்த நடைமேடை மேம்பாலங்கள், 12 மீட்டர் வரை அகலப்படுத்தப்பட்டுள்ளன.