பெய்ஜிங்: சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஷான்டாங் மாகாணத்தின் ஸாவோஷுவாங் நகரை சேர்ந்த 18 வயது சிறுவன் சமீபத்தில் தனது பள்ளி படிப்பை முடித்தான்.
இதையடுத்து, வடமேற்கு சீனாவில் உள்ள ஷின்ஜியாங் மாகாணத்தின் கரமேயில் உள்ள ஷின்ஜியாங் மருத்துவக் கல்லூரியில் அவனுக்கு இடம் கிடைத்தது. ஸாவோஷுவாங் மற்றும் கரமே நகரங்களுக்கு இடையேயான பயண தூரம் 3,500 கி.மீ. ஆகும். ஆனாலும் சிறுவனின் தந்தை கெங், மகனை தனியாக அனுப்பி வைக்காமல், அவரே காரில் கொண்டுபோய் விட முடிவு செய்தார்.
இந்த பயணத்தில் கெங்கின் மனைவி, மகள், மருமகன் மற்றும் அவரது தந்தை ஆகியோரும் இணைந்தனர். ஸாவோஷுவாங்கில் இருந்து ஆகஸ்ட் 20-ம் தேதி புறப்பட்ட அவர்கள், நான்கு நாட்கள் கழித்து, கரமே நகரத்தில் உள்ள கல்லூரியை அடைந்தனர்.
இந்த பயணத்தை மறக்க முடியாததாக ஆக்குவதற்காக, கெங், காரின் பின்பக்கக் கண்ணாடியில், “மகனை கல்லூரியில் சேர்க்கப் போகிறோம். ஷான்டாங்கின் ஸாவோஷுவாங்கிலிருந்து ஷின்ஜியாங்கின் கரமேக்கு செல்கிறோம்” என்று சீன எழுத்துக்களில் ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தார்.
இது, வழிநெடுகிலும் வாகன ஓட்டிகள், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. கெங், அவரது மனைவி, அவர்களது மகள் மற்றும் அவரது கணவர் ஆகியோர் மாறி மாறி காரை ஓட்டினர். அவர்கள் பாதுகாப்புக்காக அடிக்கடி நிறுத்தியதுடன், வழியில் அவ்வப்போது சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று வந்தனர்.
கெங் இதுகுறித்து கூறுகையில், “விமானம், ரயிலில் செல்வதை விட இது செலவு அதிகம். ஆனாலும் காரில் பயணம் செய்வது பல நன்மைகளை அளிக்கிறது. நாம் நிறைய பொருட்களை எடுத்துச் செல்லலாம், விரும்பும் போதெல்லாம் நிறுத்திக் கொள்ளலாம். மிக முக்கியமாக, இந்தப் பயணம் நீடித்த நினைவுகளை உருவாக்குகிறது” என்றார்.
கெங் குடும்பத்தின் இந்த பயணம் குறித்த இந்த செய்தி சீன சமூக ஊடகங்களில் வைரலானது. பலரும் அந்த குடும்பத்துக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். “என்ன ஒரு மகிழ்ச்சியான குடும்பம்! அவர்கள் பகிர்ந்துகொள்ளும் வலுவான பிணைப்பை நான் பாராட்டுகிறேன்” என்று ஒரு பயனர் குறிப்பிட்டார்.