தோகா: கத்தாரின் எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து கத்தார் எரிசக்தித் துறை அமைச்சர் சாத் ஷெரிடா அல்-காபி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கத்தாரின் ராஸ் லஃப்பான் தொழில் துறை பகுதியில் உள்ள ‘பர்சான்' எரிவாயு விநியோக ஆலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 13 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 66 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை. இது முற்றிலும் ஒரு தொழிற்சாலை விபத்து மட்டுமே. இதில் எவ்வித சதிவேலையோ அல்லது தாக்குதலோ இல்லை. இவ்வாறு அல்-காபி கூறினார்.
இந்த விபத்து குறித்து தோகாவில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அவசர உதவிக்குத் தொடர்புகொள்ள +974-55647502, +974-55384683 ஆகிய தொலைபேசி எண்களையும், cons.doha@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.