டெஹ்ரான்: அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று ஈரானை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதற்கு ஈரான் மறுத்ததால் அந்நாட்டின் மீது அமெரிக்க - இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தின.
இந்நிலையில் போரை நிறுத்த பாகிஸ்தான் செய்த மத்தியஸ்தம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து நடைபெறாமல் முடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானில்தான் இருக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அமைதிப் பேச்சுவார்த்தை மேலும் சிக்கலாகும் எனத் தெரிகிறது. இது குறித்து அமெரிக்கா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானை விட்டு அகற்றப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கிய கோரிக்கை. இதை ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி நிராகரித்துள்ளதாக வெளியான தகவல் மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.