புதுடெல்லி: கழுதை வழிப்பாதை போன்ற சட்டவிரோத வழிகள் வழியாக மெக்சிகோவுக்குள் யாரும் நுழைய வேண்டாம் என்று சீக்கிய இளைஞர் ஒருவர் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘மெக்சிகோவில் இந்திய சீக்கியர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட மோசமான கொடுமை’ என்ற பெயரில் ஒரு வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியானது. மெக்சிகோவில் சிக்கிக் கொண்ட சீக்கிய இளைஞர் ஒருவர் அண்மையில் அந்த வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் சட்டவிரோதமாக மெக்சிகோவுக்குள் கழுதை வழிப்பாதை வழியாக (டாங்கி ரூட்) நுழைய முயன்றேன்.
நான் பஞ்சாபை சேர்ந்தவன். நான் மெக்சிகோவுக்குள் நுழைந்து தவறு செய்துவிட்டேன். டாங்கி ரூட் வழியாக யாரும் இங்கு நுழைய வேண்டாம். ஏஜென்ட்டுகளின் பேச்சைக் கேட்டு ‘டாங்கி’ வழித்தடம் வழியாக வந்து நம்பி ஏமாற வேண்டாம். நான் இப்போது மெக்சிகோவில் சிக்கித் தவிக்கிறேன். எனக்கு உதவ யாரும் இல்லை.
தெரியாமல் இந்த வழியாக வந்து தப்பிக்க முயன்றபோது நான் தாக்கப்பட்டேன். கடுமையாகத் தாக்கப்பட்டதால் என்னால் சரியாக நடக்க முடியவில்லை.
சட்டவிரோத வழிகள் மூலம் வெளிநாடுகளுக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதாகக் கூறும் ஏஜென்ட்டுகளின் வலையில் விழ வேண்டாம்.
நான் செய்த தவறை ஒப்புக்கொண்டேன். அதற்கான விலையை ஏற்கனவே கொடுத்துவிட்டேன். என்னை மன்னியுங்கள்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் இருக்கும் சீக்கிய இளைஞரின் பெயரோ அல்லது முகவரியோ குறிப்பிடப்படவில்லை. 33 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ கடந்த 13-ம் தேதி சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.
‘டாங்கி’ (Donkey) வழித்தடம் என்பது, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மெக்சிகோ உள்ளிட்ட பல இடைப்பட்ட நாடுகள் வழியாக மேற்கொள்ளும் ஒரு சட்டவிரோத குடியேற்ற வழியாகும். இந்தப் பயணத்துக்கு ரூ. 20 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை செலவாகலாம் என்று தெரிகிறது. இதற்கான கட்டணம் பெரும்பாலும் தவணை முறையில் செலுத்தப்படுகிறது. பயணம் சுமூகமாக இருக்கும் என்று ஏஜென்ட்டுகள் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டாலும், குடியேறிகள் பெரும்பாலும் சுரண்டல், வன்முறை, கட்டாயப் பணம் பறிப்பு, சிறைபிடிப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில், பஞ்சாபிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் வெளிநாடுகளில் வாய்ப்புகளைத் தேடி இத்தகைய வழிகள் மூலம் அமெரிக்கா சென்றுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.