

சென்னை: பாரத்பென்ஸ் வர்த்தக வாகனங்களைத் தயாரித்து வரும் டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிகல்ஸ் (டிஐசிவி) நிறுவனம், தனது அடுத்தகட்ட வளர்ச்சி பயணத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் ரூ.4,000 கோடி கூடுதல் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், இந்தியாவில் அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த முதலீடு ரூ.14,500 கோடியை தாண்டியுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டெய்ம்லர் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த புதிய முதலீட்டின் மூலம் பாரத்பென்ஸ் வாகனங்களின் புதிய தயாரிப்பு மேம்பாடு, உற்பத்தி விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை மேம்படுத்தப்படவுள்ளன.
மேலும், இந்த முதலீட்டுத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் 400 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். சென்னை அருகே ஒரகடத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தைக் கொண்டுள்ள டெய்ம்லர் நிறுவனத்தில், தற்போது 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பாரத்பென்ஸ் வாகனங்களின் உதிரிபாகத் தேவையில் 92 சதவீதத்தை தமிழகத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட உள்ளூர் விநியோகஸ்தர்கள் மூலமே இந்நிறுவனம் பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.