உலகம்

சபாகர் துறைமுக திட்டத்துக்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது: ஈரான்

மோகன் கணபதி

தெஹ்ரான்: சபாகர் துறைமுக திட்டத்துக்கு இந்தியா, இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றமளிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

இந்திய - ஈரான் கூட்டு திட்டமான சபாகர் துறைமுக திட்டத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தியா நிதியை குறைத்திருப்பது ஏமாற்றமளிக்கிறதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அப்பாஸ் அராக்சி, ‘‘இது ஈரான் மற்றும் இந்தியா இரண்டுக்கும் ஏமாற்றம் என்று நான் நினைக்கிறேன். இந்திய பெருங்கடலை, மத்திய ஆசியா, காகசஸ் மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் தங்க நுழைவு வாயில் என்று இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி ஒருமுறை கூறி இருந்தார்.

          

இந்த திட்டம் முழுமையாக வளர்ச்சி அடைந்தால் அது இந்தியாவை ஈரான் வழியாக, மத்திய ஆசியாவுடனும், காகசஸ் உடனும், ஐரோப்பா உடனும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். அதுதான் சிறந்த போக்குவரத்துப் பாதையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நிச்சயம் ஒருநாள் இந்த துறைமுகம் முழு வளர்ச்சியைக் காணும் என்று நான் நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஈரானில் உள்ள சபாகரில் இந்திய நிதி உதவியுடன் துறைமுகம் உருவாக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானை தவிர்த்து, ஆப்கனிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடன் நேரடி வர்த்தகம் மற்றம் போக்குவரத்தை உருவாக்குவதற்கான நோக்குடன் இந்த துறைமுக திட்டம் தொடங்கப்பட்டது. பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தை சீனா தனது கட்டுப்பாட்டில் எடுத்த நிலையில், இந்தியா இந்த முன்னெடுப்பை மேற்கொண்டது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த நிதி ஆண்டில் இந்த திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த திட்டத்துக்கான ஒப்பந்தம் கடந்த 2024-ல் போடப்பட்டது. அதுமுதல் தொடர்ந்து நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT